புதன், 30 ஜூன், 2010

55 - வார்த்தை கதைகள்.......

HVL,  தன் பக்கத்தில் சுஜாதாவின் 55 - வார்த்தை கதைகள் பற்றிய ஒரு அறிமுகத்தை தந்து, தினம் ஒரு கதை என ஆவர்த்தனம் நடத்துகிறார்.

சரி நாமும் முயற்சிப்போமே என்று எழுதினால் 55 ...100 ஆகி கடைசியில் தொடரும் போடவேண்டிய நிலைமை ஆகிவிட்டது. மனம் தளராமல் கஜினி போல் படைஎடுத்ததில் மானேஜரிடம் ஒரு திட்டும் ஒரு சிலதும் தேறியது.

கதையை விடவும் அதன் வார்த்தைகளை எண்ணுவதற்கே அதிக நேரம் செலவானது. "சொல்லிக்கொண்டே" இதை போன்றவற்றை பதம் பிரித்து எண்ணுவதா வேண்டாமா என்ற குழப்பம் வேறு படுத்தி எடுத்தது. ஏறக்குறைய 55 க்குள் முடித்துவிட்டேன். இன்னும் திருத்தினால் விதிக்குள் அடங்கும்.

கீழே காண்பவை கொஞ்சம் சோதனை முயற்சிகள்.

கெட்.....செட்....கோஓஓ......


வேளை..நல்ல வேளை.....

"55 வார்த்தைகளில் கதையா? சான்சே இல்லை"

"சவால்-நாளை ஒண்ணு எழுதுறேன்"

"எப்படி?"

" சஸ்பென்சா ஒரு முடிவை மட்டும் யோசித்துவிட்டு அதற்கு முன்னால் சில நிமிடம் நடந்த நிகழ்வுகளை சொன்னால் ஒரு 55 -வார்த்தை கதை ரெடி....

இந்த மேனேஜர் இம்சைய குடுக்குறான். நேரமே கிடைக்க மாட்டேங்குது.இல்லன்னா நிறைய எழுதுவேன்"

"தெய்வமே....காலைக் காட்டு..."

"இதுக்கெல்லாம் காலை பிடிச்சுக்கிட்டு..."

என்னங்க...என்னங்க....

எந்திரிங்க......அலாரம் அடிச்சு 55 நிமிஷம் ஆச்சு.

உங்க மேனேஜர் போன் பண்ணார்........
 
      +++
 
 
............ஹல்ல்லோ.....அம்புட்டுதான் கதையே.........அடுத்த அஸ்திரம்........
 
 
கிறுக்கு.....
 
"ஏங்க உங்களுக்கு ஏதும் பிரச்சனையா?"
 
"இல்லையே ஏன்?"

"இது என்ன பேப்பர்? 55 நாள், 55 நிமிஷம், 55 ரூபா பாக்கி...அப்படின்னு?"

"அதை தூக்கி குப்பையில் போடு"

"தெரியாமத்தான் கேக்குறேன்...... 55 வார்த்தையில் கதை எழுத முடியலன்னா விட்ருங்களேன்.இப்படி 55 ...... 55 ன்னு கிறுக்கிட்டே இருந்தா எப்படி?. இந்தவாரம் உங்களை கவுன்சிலிங் கூட்டிட்டு போகணும்."

தீபா ஒரு நொடி அதிர்ச்சியாகி.....தனக்குள் கேட்டாள்....

"நான் நல்லா தானே இருக்கேன்?.....ஏன் இப்படி எழுதிக்கிட்டு இருக்கேன்?"

     +++

...................எஸ்கே............ப்ப்ப்பப்ப்ப்ப்........................
.

சனி, 26 ஜூன், 2010

ஒரு சிறிய தொடர் கதை முயற்சி......................... எங்கிருந்தோ வந்தான்.....

ஜெகா...அங்கே பார்ரா?...யாருடா அவன்..?

தெரியலடா....ஆளப்பாத்தா ஒரு மார்கமாத்தான் தெரியிறான்.. என்னோட இந்த வேலைக்கு ஆப்பு வைக்கப்போறானா...?

பாத்தா சீனியர் மாதிரி தெரியிறான். இந்த டுபாக்கூர் காலேஜுக்கு இன்டர்வியு-ன்னு வந்திருக்கான்.

நல்லது தாண்டா....எனக்கு இது கிடைக்கலேன்னா சந்தோசம் தான். என்னோட நெனைப்பே வேற..ஏதோ ரிசல்ட் வர்ற வரைக்கும் ஓட்டிகிட்டு இருப்போமேன்னு வந்தேன்.டெய்லி காலேல வண்டிய எடுத்தோம்ன்னா ஜாலியா இங்க வந்து ஓ.பி அடிச்சிட்டு நாலு தம் அடிச்சிட்டு சாயங்காலமா வீட்டப்பாத்து போய்க்கிட்டே இருக்கலாம்-ன்னு நெனச்சேன். இட்ஸ் ஓ.கே. என்ன....ஒரு திறமையான...இளமையான..ஒரு புத்திசாலியான.....கெமிக்கல் இஞ்சினியரை இந்த கல்லூரி மிஸ் பண்ணுது.

இருடி மவனே... இந்த வேலை உனக்கு கிடைச்சு ....நீ இங்கேயே ஒரு அஞ்சு வருஷம் குப்பை கொட்டி... உன் ஜி.ஆர்.இ. டோபெல் வெளிநாட்டு கனவுல மண்ணு தான் விழப்போகுது.

ஹல்லோ ....நிறுத்துங்க பாஸ். என்னக்கு உள்ள ஒன்னு தோனிருச்சுன்னா அது முடிஞ்ச மாதிரிதான். அது சரி..அவனுக்கு என்ன தேவையோ? அவனுக்கு கிடைக்கட்டும்.....அவன் வர்றவரைக்கும் வெயிட் பண்ணுவோம். கொஞ்சம் பேசி பாப்போம். டேய் வர்றாண்டா.

***
ஹலோ ...ஐ யாம் குமரன்.

ஹலோ ஐ யாம் ஜெகன்.

ஆக்சுவலி....ஐ ஹாவ் கம் ஹியர் பார் அன் இண்டர்வியு...பார்...கெமிக்கல் டிபார்ட்மென்ட் ஹெச்.ஓ.டி.

ஓ குட். திஸ் இஸ் சரவணன் .....மை பிரெண்ட்.....

ஹலோ

ஹலோ நைஸ் டு மீட் யு.

ஓ...யு பீபிள் ஆல்சோ பார் திஸ் இண்டர்வியு...

நீங்க தமிழ் தானே....

யா...ஓ...சாரி பாஸ்...தமிழ்லயே பேசலாம்.... நீங்களும் இண்டர்வியுக்கா?.

இல்ல பாஸ்...இது எங்க ஊருக்கு பக்கத்துல இப்போ புதுசா ஆரம்பிச்ச காலேஜ். இந்த சேர்மன் அப்பாவுக்கு தெரிஞ்சவரு. அதான் ஒரு ரெசுமே குடுத்துட்டு வான்னு அப்பா சொன்னார். மத்தபடி எனக்கு இந்த வேலையில இண்டரஸ்ட் இல்ல.

நீங்க சரவணன்.....

நா மெகானிகல் இஞ்சினீரிங் படிச்சிட்டு ரிசல்ட் க்காக வெயிட் பண்ணுறேன்.

ரிசல்ட் வந்ததும்...

தெரியல...இபோதைக்கு சும்மா ஒரு பாலிடெக்னிக்ல பார்ட் டைம் லெக்சரரா இருக்கேன். இவன் என்னோடா க்ளோஸ் பிரெண்ட் ஸ்கூல்ல இருந்து...சும்மா ஜாலியா வண்டில வந்தோம்.

வாங்களேன் ஒரு டீயும் தம்மும் அடிச்சிட்டே பேசுவோம். இன்னும் எதுவும் பார்மாலிட்டி இருக்கா?இன்னைக்கே ரிசல்ட் சொல்லிருவாங்களா?

வாங்க வெளில போய் பேசலாம்.எல்லாம் முடிஞ்சது...

நீங்க அப்படியே மெயின் கேட்டுப்பக்கமா வாங்க...நாங்க எங்க வண்டிய எடுத்துட்டு வாரோம்.

நீங்க வாங்களேன் சரவணன்...ஜெகன் வண்டிய எடுத்துட்டு வரட்டும்...

இல்ல நீங்க முன்னால போங்க..அர்ஜண்டா பிஸ்...அடிச்சிட்டு வந்துர்றேன்.

ஓகே வெளில மீட் பண்ணலாம்...

 ***
என்னடா....ஹெச் ஓ டி வேலைக்கு வந்துருக்கேன்ரான்.....
ஆள பாத்தா கோயான் மாதிரி இருக்கான்.

நல்ல வேள...நான் வரல இந்த வேலைக்கு..இல்லேன்னா இவன் என்னைய அதிகாரம் பண்ணுவான். ஆனா கொஞ்சம் ஆர்வக்கோளாறு மாதிரி தெரியிறான்...வா...வெளில போய் பேசுவோம்...

***

நீங்க ஸ்மோக் பண்ணுவீங்களா?

எஸ். ஒரு எட்டு வருசமா.

மூணு பில்ட்டர் கொடுங்க.....மூணு டீ.....குமரன் உங்களுக்கு டீ ஓகேவா..?

இல்லை....ஒரு காபி சொல்லுங்க........

பில்ட்டர் ஓகேவா...இல்ல...வேற.........

வில்ஸ் இஸ் மை சாய்ஸ்....

உனக்கு வேணும்டா....மயிறு.....கொடுக்குறதை....அடிக்க மாட்டாரோ.....

டே விடுறா...ஐ தின்க் ஹி வில் பி இண்டரஸ்டிங்.....

ஓ..தேங்க்ஸ்.......சனிக்கிழமை ஒரு பய இருக்க மாட்டேன்னு பாத்தேன்.. அட் லீஸ்ட் ஐ காட் யுவர் கம்பெனி...

என்ன ஆச்சு ...குமரன்.....இண்டர்வியு....

மண்ணாங்கட்டி.....இந்த காலேஜுக்கு இண்டர்வியு ஒண்ணுதான் கேடு. அதெல்லாம் ஒண்ணுமில்லை. முன்னாடியே என்னோட ரெசுமே பாத்துட்டு ஓகே ன்னு சொல்லிட்டாங்க.சும்மா சர்டிபிகேட் வேரிபிகேஷனுக்கு வர சொன்னாங்க.

ஓஹோ...எப்படி...ஆளப்பாத்தா...யெங்கா...தெரிறீங்க...ஹெச் ஓ டி..ன்னு சொல்றீங்க...

அப்புறம் இந்த காலேஜுக்கு 20 வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் ஆளா வருவான்?
எனக்கு 5 வருஷம் டீச்சிங் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. அண்ணா யுனிவெர்சிட்டி எம் டெக். இதுக்கு அது போதும்.

சரிதான்.....எங்க ஊரு காலேஜ ரொம்பதான் கேவலப் படுத்துறீங்க...... வேல கெடைச்சும் இவ்வளவு சலிச்சுக்கிறீங்க...

அப்படி இல்லை பாஸ்....

ஜெகன்னே கூப்பிடுங்க.......சீனியர் நீங்க...

இல்ல ஜெகன்...பழைய வேலை நல்லாத்தான் போச்சு.

சிதம்பரம்.......காமாட்சி இன்ஜினீயரிங் காலேஜ்....என்னோட க்ளோஸ் பிரெண்ட் எல்லாம் வொர்க் பண்ணோம். ஒரு நண்பருக்கும் நமக்கும் ஒத்து போகல. அதான் வெளில எங்கயாவது ட்ரை பண்ணலாம்னு பாத்தேன். ஹிண்டுல இந்த விளம்பரம் பாத்தேன். அப்பளை பண்ணேன்.

என்ன குமரன் ....பிரெண்ட்டோட சண்டைன்னா வேலையவா விடுவாங்க...?

அப்படியில்ல சரவணன்....நான் எப்பவுமே என்னோட சாயிஸ்ல தெளிவா இருப்பேன். இவன் விஷயத்துல தப்பாயிடுச்சு. என்னோட க்ளோஸ் பிரெண்ட் தான். பட் அத புரிஞ்சிக்காம அவன் என்னைய அடிக்கடி சீண்டிகிட்டே இருந்தான். சில நேரங்கள்ல சரியா பேசமாட்டான். புதுசா வந்தவங்களோட சேந்துக்கிட்டு நம்மள அவாய்ட் பண்ணான். சரி கிளம்புவோம்னு முடிவு பண்ணிட்டேன்.

இன்டரஸ்டிங்....

ஹ ஹா ......நான் இந்த ஊருக்கு புதுசு. எங்க ஸ்டே பண்ணப்போறேன் ன்னு கூட தெரியாம கிளம்பி வந்துட்டேன். இங்க பாத்தா இது ரொம்ப ரிமோட்டா இருக்கு. ஒரு லாட்ஜ் சொல்லுங்களேன். இந்த வாரம் தங்கிட்டு அப்படியே ஒரு ரூமோ இல்ல வீடோ பாத்துக்கிறேன்.

இங்கே ரொம்ப கஷ்டம். பத்து கிலோமீட்டர்ல டவுன் இருக்கு. பஸ்டாண்டு பக்கத்துல எஸ் என் எஸ் லாட்ஜ் சுமாரா இருக்கும்.அடுத்த பஸ்ல ஏறி அங்க வாங்க....நாங்க வண்டில வர்றோம்......ஒரு ரூம் போட்டுறலாம்.

தப்பா நெனைச்சுக்காதீங்க...நீங்க கொஞ்சம் குண்டு....ட்ரிபிள்ஸ் போறது கஷ்டம் உங்களுக்கு. சரவணா நீ வேணா பஸ்ல வா. நான் அவரை கூட்டிட்டு போறேன்.

நோ நோ ......நான் பஸ்லயே வார்ரேன். உங்களுக்கு எதுக்கு கஷ்டம்.

இல்ல குமரன் நீங்க வண்டில வாங்க....எனக்கு ஒன்னும் சிரமம் இல்ல..எங்க ஊரு தானே இது.

தேங்க்ஸ் எ லாட். எவளவு ஆச்சு?....

நான் பே பண்றேன்...

பாஸ் நம்ம முதல் சந்திப்பு....என்னை கொடுக்க விடுங்களேன்.....

ஓகே......நீங்க எங்க கெஸ்டு.....நாங்க கொடுப்போம்னு பாத்தோம்.

பாஸ் ஒரு பதினஞ்சு ரூபாக்கு இவ்வளவா...பரவால்ல சரவணன்.

****

அண்ணே இவர் நம்ம பிரெண்ட்..குமரன்.....ஒரு நல்ல நீட்டான ரூமா பாத்து கொடுங்க.... ஒரு வாரம் இருப்பார். வீடு ஏதும் செட் ஆகலேன்னா ஒரு மாதம் வரை இருப்பார். மாத வாடகை கணக்குலேயே போடுங்க. பின்னால பாத்துக்கலாம்.

ரொம்ப தாங்க்ஸ் ஜெகன்.சரவணன்.வாங்க ரூம்ல பேசிட்டே சாயங்காலமா போகலாம்.

இல்ல குமரன்...பசி கிள்ளுது....இபோவே நாலு மணி ஆயிடுச்சு.நீங்களும் எதாவது சாப்பிட்டுட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க.... நாங்க ஒரு ஏழு மணிக்கா வர்றோம்.

ஓகே ....தேங்க்ஸ் அகைன் பார் யுவர் டைம்லி ஹெல்ப்.

இட்ஸ் ஓகே...நைட் மீட் பண்ணலாம்.

பை....

பை...

பை...

****

ஹலோ ஜெகன்...வாங்க சரவணன்....
எங்க...மணி எட்டாச்சே..... நீங்க வரமாட்டீங்கன்னே நெனச்சேன்.

ஹலோ....பாத்தீங்களா...ஊருக்கு புதுசே...ஒரு ரெண்டு நாளைக்கு ஹெல்ப் பண்ணுவோம்னு பாத்தா... எங்களையே கலாய்க்கிறீர்களே......

சாரி மக்களே.....ஆச்சரியத்துல உளறிட்டேன்.

இட்ஸ் ஓகே. ரூம் எப்படி இருக்கு.

பரவால்ல. பாத்ரூம் தான் ரொம்ப சின்னதா இருக்கு. க்ளீன் பண்ணாம.

போகும்போது கீழ சொல்லிட்டு போறோம். நாளைக்கு கிளீன் பண்ணுவாங்க.

வேறென்ன குமரன்....மதியம் எங்க சாபிட்டீங்க.....

ஒன்னும் சாபிடல....ரெண்டு டீ குடிச்சேன். நாலு வில்ஸ் அடிச்சேன்.

சூப்பர்.....

உங்க சாய்ஸ் காபி தானே..டீ குடிச்சிருக்கீங்க.....

நோ சரவணன். டீ தான் என் பேவரைட். அப்போ சும்மா உங்களை கலாய்ச்சேன். என்னை நீங்க திட்டிருப்பீங்கன்னு எனக்கு தெரியும். நம்மள மறக்ககூடாதுல்ல.

ஆஹா...நீங்க ஒரு மார்கமான ஆளுதான்.

அப்போ வில்ஸ்....

அது என் பிரான்ட் தான்.

சரி வாங்க சாப்பிடலாம். பக்கத்துல ஒரு சின்ன ஹோட்டல் இருக்கு. கொஞ்சம் ரோட்டு கடை மாதிரி இருக்கும். ஓகேவா.

நீங்களே சொல்லும்போது...எனக்கென்ன...வாங்க ட்ரை பண்ணுவோம்.

வெஜ்ஜா....நான்வெஜ்ஜா......

பியூர் நான்வெஜ். நீங்க.....

பாம்பு....பன்னி......மாடு தவிர அனைத்தும்........

பெண்டாஸ்டிக்.

புரோட்டா...ட்ரை பண்ணுங்க.... நாங்க ஆளுக்கு ஒரு ஆம்லேட் சொல்றோம்.

நோ சரவணன். வயிறு கொஞ்சம் அப்செட். கல் தோசை ஒகே. நாளை இவங்க அயிடம்ச ஒரு கை பாத்துடலாம்.நீங்களும் கல் தோசை ட்ரை பண்ணுங்க. பொதுவா இந்த மாதிரி ஹோட்டல்ல மாவு அயிட்டங்கள் நல்லா இருக்கும்.கல்தோசை வித் கார சட்னி.....சாம்பார்...சூப்பர் காம்பினேஷன்..

எங்களுக்கேவா.....இப்போதான்...உள்ளயே வந்துருக்கீங்க....

சாப்பாடு விஷயத்துல ரொம்ப தெளிவோ...

ஆமா ஜெகன். சாப்பாடுன்னா ரொம்ப இஷ்டம். நல்லா சமைக்கவும் தெரியும்.

ஆஹா......பல திறமைகள் உங்களுக்குள் மறஞ்சிருக்கே.....

ஒரு வீடு மட்டும் எடுத்து உங்களுக்கு எல்லாம் சமைச்சு போடுறேன்.

அது கஷ்டம் குமரன்...காஸ் கனெக்ஷன் வாங்குறது ரெம்ப கஷ்டம்.

அட ஆமால்ல.....ஒரு ஆர்வக்கோளாருல சொல்லிட்டேன். பழைய ரூம்ல நான்தான் செப். அவனும் சுமாரா சமைப்பான்.நான் விரும்பி எதாவது புதுசா முயற்சி பண்ணுனா...நான் வெளில சாப்பிட்டுட்டேன்பான்.

குமரன்..சாரி...தப்பா நெனைச்சுக்காதீங்க...அவர் என்னவோ உங்க ஹஸ்பன்ட் மாதிரி பேசுறீங்க..

இட்ஸ் ஓகே. நல்ல நட்பு..எனக்கு கொஞ்சம் பொசசிவ்நெஸ் ஜாஸ்தி.

ஓகே...குமரன்...நாளைக்கு என்னோட பாமிலியும் சரவணனோட பாமிலியும் பக்கத்துல ஒரு கோயிலுக்கு போறோம். நான் நாத்திகம்.இவன் பாதி சாமியார். நாங்க சும்மா ஜாலியா பேசிக்கிட்டு இருப்போம். பேச்சே எங்கள் இருவரின் மூச்சு. ஒரு எட்டு வருசமா பேசிட்டே திரியுறோம்.

காலேஜும் ஒன்னா படிசீங்களா?

இல்லை..இந்த நாயி கவுன்சிலிங்ல சொதப்பிருச்சு....காம்பஸ் இண்டர்வியு அது இதுன்னு சொல்லி சிருஷ்டி காலேஜ் எடுத்துச்சு.

நானும் வீராப்பா என் எஸ் கே காலேஜ் எடுத்துட்டு போடான்னு போயிட்டேன்.

அப்புறம்......

வேறென்ன.....நாலு வருஷம் லெட்டர் போட்டே பேசிக்கிட்டோம்.

சூப்பர் காமெடி....பட் நீங்க நல்ல நண்பர்கள்.

இன்னொருநாள் பேசுவோம் விலாவாரியா.

நாளைக்கு நானும் உங்ககூட வரலாமா......

நீங்க ரொம்ப பாஸ்ட். நாம இன்னைக்குதான் மீட் பண்ணுனோம். ஒரு எட்டு மணி நேரம்தான் ஆகுது. பட் வேகமா மிங்கிள் ஆகுறீங்க. வி லைக் இட்.

இல்லை குமரன்...வீட்டுல ஒரு நாள் கூப்பிட்டு இன்ட்ரடியூஸ் பண்ணிட்டு இன்னொரு நாள் வெளில போலாம். நாளைக்கு நீங்க வந்தா நீங்க தான் அநீசியா பீல் பண்ணுவீங்க.

யு ஆர் கரெக்ட். சாரி பார் தட்.

இட்ஸ் ஓகே. நாளை சாயங்காலம் முடிஞ்சா வர்றோம். இல்லேன்னா திங்கள் நீங்க காலேஜ் போயிட்டு வாங்க. ஈவினிங் மீட் பண்ணலாம்.

நீங்க வரலையா ஜெகன்.உங்க ரெசுமே ரிசல்ட் என்ன?

அது ஒரு காமெடிங்க. நான் வரலை இந்த ஆட்டத்துக்கு.

ஆமா கேட்க மறந்துட்டேன். என்ன மேஜர் நீங்க?

கெமிகல்....

ஓ.....குட்.....வாங்க ஜாலியா போயிட்டு வரலாம்.

தேங்க்ஸ் குமரன். ஐ ஹாவ் டிபெரென்ட் ப்ளான்ஸ்.

ஓகே குட் லக். மீட் யு ஆன் மண்டே.

பை...ஸீ யு.

பை

பை.


(வருவார்கள்.......)

**************************

ஞாயிறு, 20 ஜூன், 2010

என்னருமை கவிதைப்பொருளே........

முன்னாள் தோழி........


பத்தாண்டுகளுக்குப்பின்

சந்திக்கிறோம் நீயும் நானும்.

இயல்பாய் எனை கட்டித்தழுவியென்

தயக்கம் போக்கினாய் நீ.

இக்கணத்தில் மிகுந்த மகிழ்ச்சியில் நான்.

நீயும் அவ்வாறே.

பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்

என்றெல்லாம் கவலை கொள்ளலகாதென்று

மீண்டும் ஒருமுறை ஆரத்தழுவுகிறாய்.

தன்னிலை மறந்த என்னை

ஒரு புள்ளியின் முத்தமிட்டுத் தேற்றியினி

அடிக்கடி வருகிறேனென்று

புறப்பட்டாய் என் கவிதைத் தோழி.

                            +++



நடைவண்டியும்...வானூர்தியும்......


யாரும் இதுவரை எழுதியிராத

ஒரு கவிதையை உருவாக்கும் பெரு முயற்சியில்

மூன்று மணி நேரமாய் நான். எதிரே

முன்னூறு கவிதைகளுடன் நீங்கள்.

நானெழுத நினைத்ததை இதிலாவது

தொட்டிருக்க மாட்டீர்கள் என்ற

புளித்த நம்பிக்கையில்

அடியெடுத்து வைக்கிறேன்

நான்காவது மணி நேரத்தில்.

மற்றுமொரு நானூறு கவிதைகளுடன் நீங்கள்.

                         +++

என்னவேண்டும் மண்டைக்குள்ளே.......


எண்ணியதெல்லாம் கவிதையாய்

எழுத முடிகிறது என்னால் என

இறுமாப்புடன் எழுதியவற்றை

மூன்றாம் முறை பிழை திருத்தும்போது

கசக்கி எறிய தகுந்ததென்று

மற்றொரு முறை முடிவெடுக்கிறேன்.

போலச் செய்தல் தவிர்த்து

புதுமையாய் எழுதுதற்கு

வேறேதும் மண்டைக்குள்ளே

வேண்டுமா சொல்க நீரே.

                          +++

இனியதோர் அலைக்கழிப்பு.....


பிரவாகமாய் உருக்கொண்டு

நாள் முழுதும் அலைக்கழித்தது.

வெறிகொண்டதை அடக்கிடும் முயற்சியில்

தொடர்ந்து போராடி ஆயாசமாகி

முடித்து வைத்து உறங்கிப்போனேன்

இரவில் ஒரு புள்ளி கொண்டு.

படபடக்கும் தாளில்

அலைக்கழிந்து கொண்டு

பரிதாபமாய் என் கவிதை.

                       +++



என்னருமை கவிதைப்பொருளே.....


வரவர அதைப் போலகிவிட்டாய் நீ.

சுற்றுவைத்து எழுதுகிறேன்.

நான்காவது சுற்று இது.

இன்னும் ஒன்றை தாங்க திராணியற்று

ஆயாசமாகிறேன்.

போதும் இன்றைக்கு-புரிந்துகொள்.

மனத்துக்குள்ளேயிருந்து வந்து

மனிதனுக்கு போதையூட்டி

கிறுக்காய் படுத்துகிறாயே

எங்கிருந்தாய் இத்தனை நாள்

என்னருமை கவிதைப்பொருளே.

                +++



உன்மத்த நிலை என்றவொன்று.....


உன்மத்த நிலையென்று ஒரு சாரார்

உவகை கொள்ளவார்.

ஏதந்த நிலையென்று

எப்போதும் வியப்புக் கொள்வேன்

இன்றந்த நிலையதனை உணர்ந்தவாறே

எழுதுகின்றேன் இந்நாள் முழுதும்

 இவ்வாறாய் தொடர்ந்தவாறே.

                    +++

திங்கள், 14 ஜூன், 2010

மனிதன் எதனால் வாழ்கிறான்.......

HVL அவர்களின் வலைப்பூவில் (என் பக்கம்)  த.அகிலனின் ஒரு சிறுகதை- ஐ பகிர்ந்துள்ளார். மரணங்களுடன் பயணிப்பவர்கள் . போர்களின், ராணுவத்தின் அடக்குமுறை எவ்வாறு ஒரு சிறுவனை பாதிக்கிறது என்பதாக அக்கதை ஒரு சம்பவத்தை விவரிக்கின்றது.

ஆதிமூலகிருஷ்ணன் அவ்வப்போது தனது வலைப்பூவில் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் தரக்கட்டுப்பாடு (TQM /TPM ) குறித்து எழுதுகிறார்.

++++++++++++++++++++++++++++++++++++++++++

மனிதன் எதனால் வாழ்கிறான்.......

உயரிய மனிதாபிமானி எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் அவர்களின் மூலக்கதை திரு நா.தருமராசன்  அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு பாரதி புத்தகாலயம் மூலம் டால்ஸ்டாய் சிறுகதைகள் -"கடவுளுக்கு உண்மை தெரியும் மற்றும் சில கதைகள்" என்ற நூலாக நீண்ட நாட்களுக்கு முன்னால் வெளியிடப்பட்டது.

நா.தருமராசன்-எங்க ஊர்க்காரர். சிவகங்கை.  குறுந்தாடி (French beard) என்னும் ஒப்பனையை முதன்முதலில் இவரிடம்தான் பார்த்தேன். என் பள்ளி நாட்களில் இவரைக்கொண்டு பாதிநாள் கருத்தரங்கம் நடத்துவார்கள். நங்கள் கழுத்து வலிக்குமாறு ஆடிடோரியத்தில் கீழாக வரிசையாய் அமர்த்தப்பட்டிருப்போம். தன் ருஷ்ய பயண அனுபவத்தை சிலாகித்து அவர் விவரிக்க நங்கள் காய்ந்த இலந்தங்கொட்டைகளை முன்னிருப்பவனின் தலையில் அடித்து மகிழ்ந்திருப்போம். மண்ணின் மைந்தர் என்றொரு பட்டம் அவருக்கு எங்களிடம்.

பின்னாளில் ஒரு அசௌகரியமான மன சூழ்நிலையில் கோவையில் ஒரு நண்பரின் அறையில் அந்த புத்தகம் என் கண்ணில் பட்டது. அதற்கு முன் நான் சிறுகதைகள் ஏதும் வாசித்ததில்லை. பள்ளி நாட்களின்போது வரும் துணைப்பாட கதைகள் மற்றும் மொழிப்பாட நூல்களின் வழியாக சில கதைகள் எனக்கு அறிமுகம் ஆயின. ஆயினும் அக்கதைகள் இன்னும் மனதைவிட்டு அகல மறுப்பதில்லை.

கதையின் பெயர்கள் யாவும் மறந்துபோனது. ஆனால் அதன் சம்பவங்கள் பாத்திரங்கள் யாவும் இன்னும் நினைவில். சில கதைகளின் பெயர்கள் நாம் மறக்க நினைத்தாலும் அகலாது. கதையோட்டத்தின் சம்பவத்தை நினைவுறுத்துமாறு அல்லது கதை வழி வரும் திறமையான பாத்திரப்படைப்பின் பெயர்களை குறிப்பிடுமாறு அதன் தலைப்பு அமைந்துவிட்டால் அது எந்நாளும் நம்மை விட்டு நீங்காது. அல்லது அதை ஒட்டி நம் அனுபவங்கள் ஏதேனும் நடந்திருந்தால் அது தூக்கத்திலும் நினைவிலிருக்கும்.

இன்றும் "சபேசன் காப்பி" -இராஜாஜி எழுதிய இக்கதை, என் ஆங்கில வகுப்பு பயிற்சி ஆசிரியர் திரு இராசேந்திரன் மூலமாக இன்றும் நினைவில் இருக்கிறது. அவர் கதை சொல்லும் பாங்கு அப்படி.

"மேகநாதன்" என்று நங்கள் சூட்டிய நாமகரணம் பொருந்த உணர்ச்சி பெருக்கோடு பாடம் நடத்தும்போது முன்வரிசை மக்களின் மேல் மழை பொழிவார். எங்களிடம் வெகு இயல்பாக நடப்பார். அவரின் நடவடிக்கைகள் எங்களுக்கு சிரிப்பை வரவைக்கும்.அது பற்றி அலட்டிக்கொள்ள மாட்டார்.

கிளாடிஸ் காஸலே ஹெய்போர்ட் (cladys casley heyford. அடிக்க வராதீர்கள் ... மேலே தொடருங்கள்) எழுதிய rejoice என்னும் பாடலின் தலைப்பு (தலைப்பு மட்டும்) இன்னும் மனதில். ஒன்பதாம் வகுப்பின் ஒயிலான காலமது.

இவ்வரிசையில்........

The man with the scar
All about a dog
The snake in the grass

போன்றவையும் அடக்கம்.

மோசிகீரனார் அரசரின் கட்டிலில் தூங்கிய கதையோடு , உதயணனை சிறையில் இருந்து காப்பாற்றும் மந்திரி மதியூகின் புல்லாங்குழலிசை என் காதுகளில் ஒலிப்பதுமதிரியான அனுபவம் எனக்கு இப்போதும் வருகிறது. இத்தனைக்கும் அது நான் படித்த துணைப்பாடம் அல்ல. என் அண்ணனுடையது. ஆதிரை என்றுகூட அதில் ஒரு கதையிருக்கும். ஆறாம் வகுப்பென்று நினைக்கிறேன். அவற்றை பிறிதோர் முறை பார்க்க கிடைத்தால் மகிழ்வேன்.

டால்ஸ்டாய் கதைகளின் தலைப்பும் வசீகரம் மிக்கது.எளிமையானது. "கடவுளுக்கு உண்மை தெரியும்" என்ற கதை ஒரு படத்தை மனக்கண் முன் நிகழ்த்தக்கூடியது. அதன் தொடக்கமே நம்மை ஒரு காட்சி அமைப்புக்கு இழுத்துச்செல்லும். அதன் முடிவில் நாம் நம்மை தொலைத்து விட்டிருப்போம். மனதை இலேசாக அல்லது கனமாக செய்யும் வித்தைகள் பொதிந்தது அக்கதைகள். "காகசஸ் கைதி" என்னுமோர் கதை ஒரு விறுவிறுப்பான திரை ஓட்டத்துடன் செல்லக்கூடியது.

அதன் வரிசையில் "மனிதன் எதனால் வாழ்கிறான்" என்ற கதை ஒரு மாற்றத்தை நம்மில் நிகழ்த்த முயலும். நம் பழைய குணங்களின் சதவீதத்தின் அளவுப்படி அதன் தாக்கம் அமையும். அக்கதையின் மூலம் ஒருவரிடமாவது நம் மனிதாபிமானம் வெளிப்படும் அதிசயம் நிகழுமாறு நிச்சயம் அதன் தாக்கம் அமையும்.



பார்போரிடதில்லெல்லாம் அக்கதையை சொல்லி திரிந்திருக்கிறேன். சிலர் "அப்புறம் வேற?" என்று கடந்திருக்கிறார்கள். சிலர் கண்களில் கண்ணீர்துளிகள் கட்டியதை மறைத்திருக்கிறார்கள். நிச்சயம் உங்களிடமும் அக்கதையை பகிர்வேன். அதன் முன்னோட்டமாக கீழ் வரும் ஒரு சம்பவத்தை தற்போது பகிர ஆசைப்படுகிறேன்.

அவ்வப்போது நண்பர்களின் மூலம் சில நீண்ட மின்னஞ்சல்கள் "அம்மாவை மறக்காதே " "அப்பாவின் பரிணாமம்", "நண்பர்களை பிரியாதே",
"துணையின் தொல்லைகள்" என்றவாறு நம் அலுவலகப்பணி இடையில் ஒரு பணி மாற்றாக நம்மை வேறோர் உணர்வுக்கு சில நேரம் இழுத்துச்செல்லும். அவ்வப்போது சில நல்ல சம்பவங்கள், நீதி கதைகள் என்றும் வரும். மகனின் கடுஞ்சொல் தவிர்க்க வேலிப்பலகையில் ஆணி அடிக்கச்சொல்லும் தந்தையின் கதை-ஐ நீங்களும் மறந்திருக்க மாட்டீர்கள். யார் இவற்றின் தொடக்கம் மூலம் என நினைக்க ஒரு பதிலும் கிட்டாது. எனினும் போர்வர்ட் "forward " மூலமாக அது உலகத்தை சுற்றிக்கொண்டிருக்கும். முகமறியா இம்மெயிலாளர்கள் வாழ்க.

அந்தவகையில் சமீபத்தில் எங்கள் கல்லூரித்தோழர் "திலக் பாரதி" எங்கள் கல்லூரி வகுப்பின் யாகூ குழுமத்திற்கு ஒரு மினஞ்சல் அனுப்பியிருந்தார். டால்ஸ்டாய்-ன் மனிதன் எதனால் வாழ்கிறான் என்ற கதையின் ஒரு தற்போதைய வடிவமாக எனக்குப்பட்டது உங்கள் பார்வைக்கு. அன்பு நண்பர் திலக் பாரதிக்கு என் நன்றிகள்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++
அது ஒரு மாலை நேரம். இடம் நியூயார்க்கின் ப்ரூக்ளின் நகரம். அங்குள்ள குறைபாடுகள் உள்ள சிறுவர், சிறுமியர் படிக்கும் பள்ளியில் ஒரு விழா நடந்து கொண்டிருக்கிறது. அப்போது ஒரு சிறுவனின் தந்தை பேசிய பேச்சு அங்கு வந்திருந்த அனைவர் மனதையும் கரைத்து அது மறக்க முடியாத பேச்சாக அமைந்தது..

அவர் குறைபாடுள்ள குழந்தைகளைப் பெற்ற பெற்றோர் படும் மன வேதனைகளை மிக உருக்கமாகச் சொன்னார். “...... இறைவன் படைப்புகள் எல்லாம் அற்புதமானது, நிறைவானது, குறைபாடில்லாதது என்று எப்படிச் சொல்ல முடியும்? சாதாரண குழந்தைகள் சாதாரணமாகச் செய்ய முடிந்த எத்தனையோ வேலைகள் என் மகன் ஷாயாவால் முடிவதில்லை. அவனால் சின்னச் சின்ன தகவல்களைக் கூட நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. அவனால் செய்ய முடிந்தவைகளை விட செய்ய முடியாதவை தான் அதிகம். செய்ய முடிந்தவைகளைக் கூட அரைகுறையாய் தான் செய்ய முடிகிறது. அப்படி இருக்கையில் இறைவன் படைப்பில் நிறைவு உள்ளது என்பதை எப்படி நம்மால் கூற முடியும்?”

அவர் உருக்கமாகக் கேட்டு விட்டு அங்கு கூடியிருந்தோரைப் பார்த்தார். அத்தனை பேரிடமும் அதற்கு பதில் இருக்கவில்லை. அத்தனை பேரும் அந்த மனிதரின் மன வலியை உணர்ந்தவர்களாக மௌனமாக இருந்தார்கள். அந்தத் தந்தை சொன்னார். “நான் நம்புகிறேன், இது போன்ற குழந்தைகளைப் படைக்கும் இறைவன் நிறைவை அந்தக் குழந்தைகளிடம் பழகும் மனிதர்களிடம் தான் எதிர்பார்க்கிறான். இது என் மகன் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தின் போது நான் புரிந்து கொண்டேன்....” அவர் அந்த நிகழ்ச்சியை மிகவும் நெகிழ்ச்சியுடன் விவரித்தார்.

ஒரு நாள் மதிய வேளையில் அவரும் அவர் மகன் ஷாயாவும் ஒரு விளையாட்டு மைதானம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அந்த மைதானத்தில் சில சிறுவர்கள் தளப்பந்து (base ball) விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஷாயா அந்தச் சிறுவர்கள் விளையாடுவதைப் பார்த்து தன் தந்தையிடம் கேட்டான். “அப்பா அவர்கள் என்னையும் அந்த விளையாட்டில் சேர்த்துக் கொள்வார்களா?”

அவருக்குத் தன் மகனால் அந்த விளையாட்டைத் திறம்பட விளையாட முடியாது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த சிறுவர்களோ மிகத் தீவிர ஈடுபாட்டுடன் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் சென்று கேட்கவே தயக்கமாக இருந்தாலும் அவர் முயற்சி செய்து பார்ப்பதில் தவறில்லை என்று எண்ணினார். தயக்கத்துடன் சென்று ஒரு சிறுவனிடம் கேட்டார். “என் மகனும் ஆட ஆசைப்படுகிறான். அவனையும் சேர்த்துக் கொள்வீர்களா?”

அந்த சிறுவன் ஷாயாவைப் பார்த்தான். பார்த்தவுடனேயே அவன் குறைபாடுள்ள சிறுவன் என்பதை அந்த சிறுவன் புரிந்து கொண்டான். தன் நண்பர்களைப் பார்த்தான். அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. அவன் ஷாயாவின் முகத்தில் தெரிந்த ஆர்வத்தைப் பார்த்து மனம் இளகியவனாக அவரிடம் சொன்னான். “நாங்கள் இப்போது எட்டாவது இன்னிங்க்ஸில் இருக்கிறோம். இப்போதே ஆறு ரன்கள் குறைவாக எடுத்து பின்னணியில் இருக்கிறோம். என்னுடைய டீமில் அவனைச் சேர்த்துக் கொள்கிறேன். ஒன்பதாவது இன்னிங்க்ஸில் அவனுக்கு பேட்டிங் தருகிறோம்”

அதைக் கேட்டு ஷாயாவின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்த்த தந்தையின் மனம் நிறைந்தது. ஷாயா அந்த விளையாட்டுக்காக கையுறையை மாட்டிக் கொண்டு மைதானத்தில் பெருமிதத்துடன் போய் நின்றான். ஆனால் அந்த விளையாட்டின் எட்டாவது இன்னிங்க்ஸிலன் இறுதியில் ஷாயாவை சேர்த்த அணி மூன்று ரன்கள் மட்டுமே பின்னணியில் இருந்தது. நன்றாக ஆடத் தெரிந்தவன் ஆடினால் அவர்கள் அணி வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஒரு இக்கட்டான கட்டத்தில் ஷாயாவை அவர்கள் ஆட விடுவார்களா என்ற சந்தேகம் அவன் தந்தைக்கு வந்தது.

ஆனால் சொன்னபடி ஷாயாவை ஆட அவர்கள் அனுமதித்தார்கள். ஷாயாவிற்கு அந்த பேட்டை சரியாகப் பிடிக்கவே தெரியவில்லை. அவனை ஆட அனுமதித்த சிறுவன் பேட்டை எப்படிப் பிடிக்க வேண்டும் என்று சொல்லித் தந்தான். பந்து எறியும் சிறுவன் சற்று முன்னால் வந்து அந்தப் பந்தை மென்மையாக வீசினான். அந்தப் பந்தை ஷாயா அடிக்க உதவ வேண்டும் என்பது அவன் எண்ணமாக இருந்தது. அந்தப் பந்தை அவன் அப்படி வீசியும் ஷாயாவால் பேட்டால் அடிக்க முடியவில்லை. அடுத்த முறை ஷாயாவின் அணிச் சிறுவன் ஒருவன் ஷாயாவுடன் சேர்ந்து பேட்டைப் பிடித்துக் கொண்டான்.

பந்தெறிபவன் அடுத்த முறையும் சற்று முன்னால் வந்து மென்மையாகவே வீசினான். ஷாயாவும், அவனுடைய சகாவும் சேர்ந்து இந்த முறை பந்தை அடித்தார்கள். அந்தப் பந்து குறைவான வேகத்தோடு ப்ந்தெறிபவன் காலடியில் வந்து விழுந்தது. அவன் அதை எடுத்து முதல் தளக்காரனிடம் எடுத்து வீசினால் ஷாயா ஆட்டமிழந்து அவன் அணியும் தோற்று விடும்.

ஆனால் அந்தப் பந்தெறிபவன் வேண்டுமென்றே அதை மிக உயரமாகத் தூர வீச ஷாயாவின் அணியினர் கத்தினார்கள். “ஷாயா ஓடு. வேகமாக முதல் தளத்துக்கு ஓடு...” ஷாயா இப்படியொரு நிலையை எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் ஒரு கணம் திகைத்து பின் தலை தெறிக்க ஓடினான். முதல் தளத்தை அவன் அடைந்த போது அந்தப் பந்தை எதிரணிச் சிறுவன் எடுத்தான். முதலில் பந்தெறிந்தவனுடைய எண்ணம் அவனுக்கும் புரிந்திருந்தது. ஒரு ரன் எடுத்து முடித்த நம்ப முடியாத மகிழ்ச்சியில் இருந்த ஷாயாவின் முகத்தைப் பார்த்தவன் அந்த பந்தை தன் அணிக்காரன் எளிதில் பிடிக்க முடியாதபடி வீசினான்.


மைதானத்தில் “ஷாயா ஓடு. இரண்டாம் தளத்திற்கு வேகமாக ஓடு” என்ற சத்தம் பலமாக எழுந்தது. ஷாயா மீண்டும் தன்னால் முடிந்த வரை தலை தெறிக்க ஓடினான். இப்படியே அந்த ஆட்டத்தில் ஷாயாவை நான்கு ரன்கள் எடுக்க வைத்தார்கள். ஷாயாவின் அணி வெற்றி பெற்றது..

நான்காவது ரன்னை எடுத்து முடித்த போது மைதானத்தில் பதினெட்டு ஆட்டக்காரச் சிறுவர்களும் ஷாயாவைத் தோள்களில் தூக்கி ஆட்ட நாயகனாகக் கொண்டாட ஷாயாவின் முகத்தில் தெரிந்த மட்டில்லாத மகிழ்ச்சியைக் கண்ட அந்த தந்தை கண்ணில் அருவியாகக் கண்ணீர் வழிந்தது.

அதைச் சொல்லும் போதும் அந்தத் தந்தை கண்களில் கண்ணீர். “அன்றைய தினத்தில் அந்த பதினெட்டு சிறுவர்களும் இறைவனின் படைப்பின் நிறைவை எனக்குத் தெரியப்படுத்தினார்கள். என் மகன் அது வரை அவ்வளவு மகிழ்ச்சியாகப் பெருமையுடன் நின்றதைக் காணும் பாக்கியம் எனக்கு இருக்கவில்லை. அந்த நாள் என் மகன் வாழ்விலும், என் வாழ்விலும் மறக்க முடியாத நாளாகி விட்டது....”
அந்த சிறுவர்களுக்கு ஒவ்வொரு விளையாட்டிலும் வெல்லத் துடிக்கிற வயது. அவர்களுக்கு வெற்றி மிக முக்கியம். வாழ்வில் பெரிய பெரிய சித்தாந்தங்கள் எல்லாம் அறிந்திருக்கும் வயதோ, பக்குவமோ இல்லாத வயதினர் அவர்கள். அவர்கள் அன்று முன்பின் அறியாத ஷாயா என்ற குறைபாடுள்ள சிறுவனிடம் காட்டிய அன்பும், பரிவும் ஒப்புயர்வில்லாதவை. அவர்கள் அந்தச் சிறுவனை வெற்றி பெறச் செய்த செயல் சாமானியமானதல்ல.

இது போன்ற செயல்களில் தான் உண்மையாக மனிதம் மிளிர்கிறது. அந்த விளையாட்டை ஷாயாவின் வீட்டார்கள் ஆடி அவனை வெற்றி பெறச் செய்திருந்தால் அது செய்தியல்ல. முன்பின் அறியாத சிறுவர்களிடம் இருந்து அந்த அன்பு பிறந்தது தான் வியப்பு. அது தான் மனிதம்.

இது போன்ற மனிதம் மிளிர பெரிய பெரிய தியாகங்கள் கூடத் தேவையில்லை. மிகப் பெரிய நிலையில் இருக்க வேண்டியதில்லை. தங்களைப் பெரிதும் வருத்திக் கொண்டு யாருக்கும் யாரும் எதுவும் செய்ய வேண்டியதில்லை. தினசரி வாழ்க்கையில் நம்முடைய அன்பான சிறிய செயல்களால், சிறிய விட்டுக் கொடுத்தல்களால் பெரிய மகிழ்ச்சியை அடுத்தவர்கள் மனதில் ஏற்படுத்த முடியும். அதுவே மனிதம்.

இந்த மனிதம் பலவீனர்களைப் பார்க்கிற போது பலசாலிகளுக்கு வந்தால், இல்லாதவர்களைப் பார்க்கிற போது இருப்பவர்களுக்குள்ளே எழுந்தால், வேதனையிலும், துக்கத்திலும் இருப்பவர்களைப் பார்க்கையில் அவற்றை நிவர்த்தி செய்ய முடிந்தவர்கள் மனதில் மலர்ந்தால் இந்த உலகம் சொர்க்கமாக அல்லவா மாறி விடும்! நம்மால் முடிந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் அது போன்ற ஒரு சொர்க்கத்தை உருவாக்க நாம் முயற்சிப்போமா?

++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஞாயிறு, 6 ஜூன், 2010

அக்கரை......சித்தர்......சுஜாதா......

லேகா மற்றும் நர்சிமின் பதின் வயது நினைவுகளின் பதிவுகள் அருமை.
http://yalisai.blogspot.com/2010/05/blog-post_19.html
http://www.narsim.in/2010/05/blog-post_25.html

லேகாவின் "பாரான்" விமர்சனம் படித்தேன். அருமை. சுஜாதா விருது அவருக்கு மேலும் ஊக்கத்தை அளிக்கும்.வாழ்த்துக்கள் லேகா.
http://yalisai.blogspot.com/2010/04/blog-post_17.html


கூகுள் வழங்கும் இந்த வசதி என்னைப்போன்ற புதிய வலைபதிவர்களுக்கு இலகுவாக தமிழை தட்டச்சு செய்ய வசதி செய்கிறது.

http://www.google.com/transliterate/indic/Tamil

********************************************************************************

என் ஆறாம் வகுப்பின் போது வெளியில் படித்த ஹிந்தி ட்யூஷனில் "கணையாழி" என்ற பதத்தை எங்கள் மிஸ் சீதா அக்கா பயன்படுத்த கேட்டிருக்கிறேன்.

எல்லோரும் அந்தந்த வயதில் அதற்குண்டான அனுபவங்களை கட்டாயம் அனுபவிக்கிறோம். காலம் நம் அனைவரின் வயதுகளுக்கும் ஏற்ற அனுபவம் ஒன்றை முன்பே தயாரித்து வேளை வரும் போது பிரயோகிக்கிறதோ.....அவை அனைத்தும் பெரும்பாலும் சில விதிகளுக்கு கட்டுப்பட்டதுதானோ........

சுஜாதாவின் கணையாழியின் கடைசி பக்கங்களை வாசிக்கும் அளவுக்கு இப்போதுதான் வளர்ச்சி அடைந்திருக்கிறேன்.

மனுஷன் அப்போவே ப்ளாக் இல்லாத குறையை அவராகவே தீர்த்திருக்கிறார். ஒளிவு மறைவு இல்லாத அவரின் சுவாரசியமான நடை அவருக்கே உரித்தான ஒன்று.

அக்கால நடவடிக்கைகளின் பிரதிபலிப்பை நேர்மையாக அணுகுகிறார்.

கவிதை எதுவும் எழுத நினைக்கும் போது மனக்கண்ணில் தோன்றி பயமுறுத்துகிறார்.

"என்னைய்யா விளையாடுகிறீர்களா?" என்று நிஜமான அக்கறையில் தனது அதிருப்தியை வெளியிடுகிறார்.

அவர் குறிப்பிடும் இந்த பாடல் மனதில் ஒட்டிக்கொண்டது. அதன் கோபத்திற்கு அதன் எளிய நடைக்கு அதன் ஓசைக்கு.

பறைச்சியாவ தேதடா பணத்தியாவ தேதடா

இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோ

பறைச்சி போகம் வேறதோ பணத்தி போகம் வேறதோ

பறைச்சியும் பணத்தியும் பகுந்து பாரும் உம்முளே.
                                                                                -சிவவாக்கியர்.

சின்ன வயதில் என் அண்ணன் எதையோ ரசனையாக பாடிக்கொண்டிருப்பான்.
அப்போது அதன் ஓசை நயத்தில் அதுவாகவே வந்து மனதில் பதிந்து கொண்டது.

நட்ட கல்லை தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்தியே

சுற்றி வந்து மொனமொனந்து சொல்லும் மந்திரம் ஏதடா

நட்ட கல்லும் பேசுமோ நாதர் உள்ள்ளிருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ.

சித்தர் பாடல்கள் ஒரு வித ஆளுமை நிலையை ஒரு பரவசத்தை நம்முள் நிகழ்த்துகின்றன.
தேடி படிக்க வேண்டும். அப்பாவின் நூலகத்தை அருகில் இருந்தும் நுகர மறந்த பாவத்தை இனியாவது செய்யக்கூடாது.
சுஜாதாவுக்கும் என் அண்ணனுக்கும் நன்றிகள். அப்பாவிற்கும்.



அக்கரை சீமையின் தனிமை சனி ஞாயிறு

சித்தரை முணுமுணுக்க செய்த சுஜாதா

நித்திரை மறக்கடித்து கணினி முன்னமர்ந்து

பதிவுரை எழுதவைத்த நல்ல தமிழ் இணையம் வாழ்க.


-கபிலன்.

புதன், 2 ஜூன், 2010

சங்கரலிங்கம்........





















அம்மாவுக்கென்று பெரிதாய் ஏதும்
சேர்த்துவைத்துவிட்டு போகவில்லை என
அப்பா கரித்துக் கொட்டுவார் உன்னை.
அண்ணனை திட்டும்போதெல்லாம்
உன்னை போலவே பிறந்திருக்கிறான் என்கிறார்கள்.
வேலையை எழுதிக் கொடுத்து
பென்சனுக்கு கூட வழிஇல்லாமல் செய்துவிட்டாயாம்
புலம்புவாள் பாட்டி.
உன் தலையணை அடியிலிருக்கும் சில்லறைகளை திருடி
சீனி மிட்டாய் தின்றபோது
நீ  ஏன் படுத்தே இருக்கிறாய் என யோசித்ததில்லை நான்.
அண்ணனுக்கு நீ சைக்கிள் ஒட்ட கற்றுதந்தபோது
எனக்கும் என நான் அழுததும்,
அவனுக்கும் எனக்குமான சண்டைகளை தவிர்க்க
இரண்டிரண்டாய் நீ வாங்கிவரும்
திண்பண்டங்களின் இனிப்பும் மங்கலாய் என்னுள்.
உன் பழய புகைபடம் போல.
நீ இறந்தபோது அழக்கூட இல்லை நான்.
ஊரார் மட்டும் இன்றும் என்னை
உன் பேரன் என்றே விசாரிக்கிறார்கள்.

என்னவோ செய்திருக்கிறாய்
எனதருமை தாத்தா நீ.