ஞாயிறு, 20 ஜூன், 2010

என்னருமை கவிதைப்பொருளே........

முன்னாள் தோழி........


பத்தாண்டுகளுக்குப்பின்

சந்திக்கிறோம் நீயும் நானும்.

இயல்பாய் எனை கட்டித்தழுவியென்

தயக்கம் போக்கினாய் நீ.

இக்கணத்தில் மிகுந்த மகிழ்ச்சியில் நான்.

நீயும் அவ்வாறே.

பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்

என்றெல்லாம் கவலை கொள்ளலகாதென்று

மீண்டும் ஒருமுறை ஆரத்தழுவுகிறாய்.

தன்னிலை மறந்த என்னை

ஒரு புள்ளியின் முத்தமிட்டுத் தேற்றியினி

அடிக்கடி வருகிறேனென்று

புறப்பட்டாய் என் கவிதைத் தோழி.

                            +++



நடைவண்டியும்...வானூர்தியும்......


யாரும் இதுவரை எழுதியிராத

ஒரு கவிதையை உருவாக்கும் பெரு முயற்சியில்

மூன்று மணி நேரமாய் நான். எதிரே

முன்னூறு கவிதைகளுடன் நீங்கள்.

நானெழுத நினைத்ததை இதிலாவது

தொட்டிருக்க மாட்டீர்கள் என்ற

புளித்த நம்பிக்கையில்

அடியெடுத்து வைக்கிறேன்

நான்காவது மணி நேரத்தில்.

மற்றுமொரு நானூறு கவிதைகளுடன் நீங்கள்.

                         +++

என்னவேண்டும் மண்டைக்குள்ளே.......


எண்ணியதெல்லாம் கவிதையாய்

எழுத முடிகிறது என்னால் என

இறுமாப்புடன் எழுதியவற்றை

மூன்றாம் முறை பிழை திருத்தும்போது

கசக்கி எறிய தகுந்ததென்று

மற்றொரு முறை முடிவெடுக்கிறேன்.

போலச் செய்தல் தவிர்த்து

புதுமையாய் எழுதுதற்கு

வேறேதும் மண்டைக்குள்ளே

வேண்டுமா சொல்க நீரே.

                          +++

இனியதோர் அலைக்கழிப்பு.....


பிரவாகமாய் உருக்கொண்டு

நாள் முழுதும் அலைக்கழித்தது.

வெறிகொண்டதை அடக்கிடும் முயற்சியில்

தொடர்ந்து போராடி ஆயாசமாகி

முடித்து வைத்து உறங்கிப்போனேன்

இரவில் ஒரு புள்ளி கொண்டு.

படபடக்கும் தாளில்

அலைக்கழிந்து கொண்டு

பரிதாபமாய் என் கவிதை.

                       +++



என்னருமை கவிதைப்பொருளே.....


வரவர அதைப் போலகிவிட்டாய் நீ.

சுற்றுவைத்து எழுதுகிறேன்.

நான்காவது சுற்று இது.

இன்னும் ஒன்றை தாங்க திராணியற்று

ஆயாசமாகிறேன்.

போதும் இன்றைக்கு-புரிந்துகொள்.

மனத்துக்குள்ளேயிருந்து வந்து

மனிதனுக்கு போதையூட்டி

கிறுக்காய் படுத்துகிறாயே

எங்கிருந்தாய் இத்தனை நாள்

என்னருமை கவிதைப்பொருளே.

                +++



உன்மத்த நிலை என்றவொன்று.....


உன்மத்த நிலையென்று ஒரு சாரார்

உவகை கொள்ளவார்.

ஏதந்த நிலையென்று

எப்போதும் வியப்புக் கொள்வேன்

இன்றந்த நிலையதனை உணர்ந்தவாறே

எழுதுகின்றேன் இந்நாள் முழுதும்

 இவ்வாறாய் தொடர்ந்தவாறே.

                    +++

6 கருத்துகள்:

http://rkguru.blogspot.com/ சொன்னது…

அருமையான கவிதை...

உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_08.html

arasu சொன்னது…

முன்னூறு கவிதைகளுடன் உன் எதிரில் இருப்பவர்கள் அனைவருமே முன்று மணிநேர பெருமுயற்சியில் கவிதை உருவாக்கியவர்கள் தான். பத்தாண்டுகளுக்கு பிறகு சந்தித்த தோழி அடிக்கடி வருவது மட்டுமல்லாது உன்னுடனே இருந்திட வாழ்த்தும் அன்பு சகோதரன் திருநா......

உன் வலைப்பூவின்வழியாக செல்வாவின் யார்கர் முருகன் படித்தேன் சிரித்து மகிழ சிறப்பான கதை..பிற இணைப்புகளையும் படிக்க வேண்டும். நன்றி..................

கபிலன் சொன்னது…

அன்பின் ஆர். கே. குரு.
நன்றி. நாமளாவது ஓட்டுக் கலாச்சாரத்தில் சிக்காதிருப்போமே.
அழகுற எழுத மட்டும் பழகுவோமே.

திருநா.....
தொடர்ந்து நீ படிப்பது எனக்கு மிகுந்த ஊக்கத்தை தருகிறது.
அவசரமான இந்த பொருளீட்டும் வாழ்க்கையில்
உனது எனது பால்ய காலங்களை அசைபோடுதர்க்கும்
வயதின் முதிர்ச்சி காரணமாக நம்மிடையேயான
பேச்சு குறைந்து போனதக்கு மாற்றாக
இப்படி பின்னூட்டங்களின் வழி நம் அன்பை மீட்டெடுப்பதற்கும்
வழியாக அமைந்த இந்த புதிய வலைப்பதிவு அனுபவம்
எனக்கு மன நிறைவைத் தருகிறது.

VELU.G சொன்னது…

நல்ல கவிதைகள்

வாழ்த்துக்கள் நண்பரே

கபிலன் சொன்னது…

மிக்க நன்றி வேலு.
தாமதமான பின்னூட்டதிற்கு மன்னிக்க.
அடிக்கடி வாருங்கள்.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் கபிலன்

அருமை அருமை - கவிதைகள் அருமை !
கவிதைத் தோழி ஆரத்தழவி அன்பு முத்தம் ஈந்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி - காதலினைத் தொடர நல்வாழ்த்துகள் கபிலன்

நட்புடன் சீனா

கருத்துரையிடுக

பேசுனா....பேர் எழுதுவேன்.....