திங்கள், 14 ஜூன், 2010

மனிதன் எதனால் வாழ்கிறான்.......

HVL அவர்களின் வலைப்பூவில் (என் பக்கம்)  த.அகிலனின் ஒரு சிறுகதை- ஐ பகிர்ந்துள்ளார். மரணங்களுடன் பயணிப்பவர்கள் . போர்களின், ராணுவத்தின் அடக்குமுறை எவ்வாறு ஒரு சிறுவனை பாதிக்கிறது என்பதாக அக்கதை ஒரு சம்பவத்தை விவரிக்கின்றது.

ஆதிமூலகிருஷ்ணன் அவ்வப்போது தனது வலைப்பூவில் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் தரக்கட்டுப்பாடு (TQM /TPM ) குறித்து எழுதுகிறார்.

++++++++++++++++++++++++++++++++++++++++++

மனிதன் எதனால் வாழ்கிறான்.......

உயரிய மனிதாபிமானி எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் அவர்களின் மூலக்கதை திரு நா.தருமராசன்  அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு பாரதி புத்தகாலயம் மூலம் டால்ஸ்டாய் சிறுகதைகள் -"கடவுளுக்கு உண்மை தெரியும் மற்றும் சில கதைகள்" என்ற நூலாக நீண்ட நாட்களுக்கு முன்னால் வெளியிடப்பட்டது.

நா.தருமராசன்-எங்க ஊர்க்காரர். சிவகங்கை.  குறுந்தாடி (French beard) என்னும் ஒப்பனையை முதன்முதலில் இவரிடம்தான் பார்த்தேன். என் பள்ளி நாட்களில் இவரைக்கொண்டு பாதிநாள் கருத்தரங்கம் நடத்துவார்கள். நங்கள் கழுத்து வலிக்குமாறு ஆடிடோரியத்தில் கீழாக வரிசையாய் அமர்த்தப்பட்டிருப்போம். தன் ருஷ்ய பயண அனுபவத்தை சிலாகித்து அவர் விவரிக்க நங்கள் காய்ந்த இலந்தங்கொட்டைகளை முன்னிருப்பவனின் தலையில் அடித்து மகிழ்ந்திருப்போம். மண்ணின் மைந்தர் என்றொரு பட்டம் அவருக்கு எங்களிடம்.

பின்னாளில் ஒரு அசௌகரியமான மன சூழ்நிலையில் கோவையில் ஒரு நண்பரின் அறையில் அந்த புத்தகம் என் கண்ணில் பட்டது. அதற்கு முன் நான் சிறுகதைகள் ஏதும் வாசித்ததில்லை. பள்ளி நாட்களின்போது வரும் துணைப்பாட கதைகள் மற்றும் மொழிப்பாட நூல்களின் வழியாக சில கதைகள் எனக்கு அறிமுகம் ஆயின. ஆயினும் அக்கதைகள் இன்னும் மனதைவிட்டு அகல மறுப்பதில்லை.

கதையின் பெயர்கள் யாவும் மறந்துபோனது. ஆனால் அதன் சம்பவங்கள் பாத்திரங்கள் யாவும் இன்னும் நினைவில். சில கதைகளின் பெயர்கள் நாம் மறக்க நினைத்தாலும் அகலாது. கதையோட்டத்தின் சம்பவத்தை நினைவுறுத்துமாறு அல்லது கதை வழி வரும் திறமையான பாத்திரப்படைப்பின் பெயர்களை குறிப்பிடுமாறு அதன் தலைப்பு அமைந்துவிட்டால் அது எந்நாளும் நம்மை விட்டு நீங்காது. அல்லது அதை ஒட்டி நம் அனுபவங்கள் ஏதேனும் நடந்திருந்தால் அது தூக்கத்திலும் நினைவிலிருக்கும்.

இன்றும் "சபேசன் காப்பி" -இராஜாஜி எழுதிய இக்கதை, என் ஆங்கில வகுப்பு பயிற்சி ஆசிரியர் திரு இராசேந்திரன் மூலமாக இன்றும் நினைவில் இருக்கிறது. அவர் கதை சொல்லும் பாங்கு அப்படி.

"மேகநாதன்" என்று நங்கள் சூட்டிய நாமகரணம் பொருந்த உணர்ச்சி பெருக்கோடு பாடம் நடத்தும்போது முன்வரிசை மக்களின் மேல் மழை பொழிவார். எங்களிடம் வெகு இயல்பாக நடப்பார். அவரின் நடவடிக்கைகள் எங்களுக்கு சிரிப்பை வரவைக்கும்.அது பற்றி அலட்டிக்கொள்ள மாட்டார்.

கிளாடிஸ் காஸலே ஹெய்போர்ட் (cladys casley heyford. அடிக்க வராதீர்கள் ... மேலே தொடருங்கள்) எழுதிய rejoice என்னும் பாடலின் தலைப்பு (தலைப்பு மட்டும்) இன்னும் மனதில். ஒன்பதாம் வகுப்பின் ஒயிலான காலமது.

இவ்வரிசையில்........

The man with the scar
All about a dog
The snake in the grass

போன்றவையும் அடக்கம்.

மோசிகீரனார் அரசரின் கட்டிலில் தூங்கிய கதையோடு , உதயணனை சிறையில் இருந்து காப்பாற்றும் மந்திரி மதியூகின் புல்லாங்குழலிசை என் காதுகளில் ஒலிப்பதுமதிரியான அனுபவம் எனக்கு இப்போதும் வருகிறது. இத்தனைக்கும் அது நான் படித்த துணைப்பாடம் அல்ல. என் அண்ணனுடையது. ஆதிரை என்றுகூட அதில் ஒரு கதையிருக்கும். ஆறாம் வகுப்பென்று நினைக்கிறேன். அவற்றை பிறிதோர் முறை பார்க்க கிடைத்தால் மகிழ்வேன்.

டால்ஸ்டாய் கதைகளின் தலைப்பும் வசீகரம் மிக்கது.எளிமையானது. "கடவுளுக்கு உண்மை தெரியும்" என்ற கதை ஒரு படத்தை மனக்கண் முன் நிகழ்த்தக்கூடியது. அதன் தொடக்கமே நம்மை ஒரு காட்சி அமைப்புக்கு இழுத்துச்செல்லும். அதன் முடிவில் நாம் நம்மை தொலைத்து விட்டிருப்போம். மனதை இலேசாக அல்லது கனமாக செய்யும் வித்தைகள் பொதிந்தது அக்கதைகள். "காகசஸ் கைதி" என்னுமோர் கதை ஒரு விறுவிறுப்பான திரை ஓட்டத்துடன் செல்லக்கூடியது.

அதன் வரிசையில் "மனிதன் எதனால் வாழ்கிறான்" என்ற கதை ஒரு மாற்றத்தை நம்மில் நிகழ்த்த முயலும். நம் பழைய குணங்களின் சதவீதத்தின் அளவுப்படி அதன் தாக்கம் அமையும். அக்கதையின் மூலம் ஒருவரிடமாவது நம் மனிதாபிமானம் வெளிப்படும் அதிசயம் நிகழுமாறு நிச்சயம் அதன் தாக்கம் அமையும்.



பார்போரிடதில்லெல்லாம் அக்கதையை சொல்லி திரிந்திருக்கிறேன். சிலர் "அப்புறம் வேற?" என்று கடந்திருக்கிறார்கள். சிலர் கண்களில் கண்ணீர்துளிகள் கட்டியதை மறைத்திருக்கிறார்கள். நிச்சயம் உங்களிடமும் அக்கதையை பகிர்வேன். அதன் முன்னோட்டமாக கீழ் வரும் ஒரு சம்பவத்தை தற்போது பகிர ஆசைப்படுகிறேன்.

அவ்வப்போது நண்பர்களின் மூலம் சில நீண்ட மின்னஞ்சல்கள் "அம்மாவை மறக்காதே " "அப்பாவின் பரிணாமம்", "நண்பர்களை பிரியாதே",
"துணையின் தொல்லைகள்" என்றவாறு நம் அலுவலகப்பணி இடையில் ஒரு பணி மாற்றாக நம்மை வேறோர் உணர்வுக்கு சில நேரம் இழுத்துச்செல்லும். அவ்வப்போது சில நல்ல சம்பவங்கள், நீதி கதைகள் என்றும் வரும். மகனின் கடுஞ்சொல் தவிர்க்க வேலிப்பலகையில் ஆணி அடிக்கச்சொல்லும் தந்தையின் கதை-ஐ நீங்களும் மறந்திருக்க மாட்டீர்கள். யார் இவற்றின் தொடக்கம் மூலம் என நினைக்க ஒரு பதிலும் கிட்டாது. எனினும் போர்வர்ட் "forward " மூலமாக அது உலகத்தை சுற்றிக்கொண்டிருக்கும். முகமறியா இம்மெயிலாளர்கள் வாழ்க.

அந்தவகையில் சமீபத்தில் எங்கள் கல்லூரித்தோழர் "திலக் பாரதி" எங்கள் கல்லூரி வகுப்பின் யாகூ குழுமத்திற்கு ஒரு மினஞ்சல் அனுப்பியிருந்தார். டால்ஸ்டாய்-ன் மனிதன் எதனால் வாழ்கிறான் என்ற கதையின் ஒரு தற்போதைய வடிவமாக எனக்குப்பட்டது உங்கள் பார்வைக்கு. அன்பு நண்பர் திலக் பாரதிக்கு என் நன்றிகள்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++
அது ஒரு மாலை நேரம். இடம் நியூயார்க்கின் ப்ரூக்ளின் நகரம். அங்குள்ள குறைபாடுகள் உள்ள சிறுவர், சிறுமியர் படிக்கும் பள்ளியில் ஒரு விழா நடந்து கொண்டிருக்கிறது. அப்போது ஒரு சிறுவனின் தந்தை பேசிய பேச்சு அங்கு வந்திருந்த அனைவர் மனதையும் கரைத்து அது மறக்க முடியாத பேச்சாக அமைந்தது..

அவர் குறைபாடுள்ள குழந்தைகளைப் பெற்ற பெற்றோர் படும் மன வேதனைகளை மிக உருக்கமாகச் சொன்னார். “...... இறைவன் படைப்புகள் எல்லாம் அற்புதமானது, நிறைவானது, குறைபாடில்லாதது என்று எப்படிச் சொல்ல முடியும்? சாதாரண குழந்தைகள் சாதாரணமாகச் செய்ய முடிந்த எத்தனையோ வேலைகள் என் மகன் ஷாயாவால் முடிவதில்லை. அவனால் சின்னச் சின்ன தகவல்களைக் கூட நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. அவனால் செய்ய முடிந்தவைகளை விட செய்ய முடியாதவை தான் அதிகம். செய்ய முடிந்தவைகளைக் கூட அரைகுறையாய் தான் செய்ய முடிகிறது. அப்படி இருக்கையில் இறைவன் படைப்பில் நிறைவு உள்ளது என்பதை எப்படி நம்மால் கூற முடியும்?”

அவர் உருக்கமாகக் கேட்டு விட்டு அங்கு கூடியிருந்தோரைப் பார்த்தார். அத்தனை பேரிடமும் அதற்கு பதில் இருக்கவில்லை. அத்தனை பேரும் அந்த மனிதரின் மன வலியை உணர்ந்தவர்களாக மௌனமாக இருந்தார்கள். அந்தத் தந்தை சொன்னார். “நான் நம்புகிறேன், இது போன்ற குழந்தைகளைப் படைக்கும் இறைவன் நிறைவை அந்தக் குழந்தைகளிடம் பழகும் மனிதர்களிடம் தான் எதிர்பார்க்கிறான். இது என் மகன் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தின் போது நான் புரிந்து கொண்டேன்....” அவர் அந்த நிகழ்ச்சியை மிகவும் நெகிழ்ச்சியுடன் விவரித்தார்.

ஒரு நாள் மதிய வேளையில் அவரும் அவர் மகன் ஷாயாவும் ஒரு விளையாட்டு மைதானம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அந்த மைதானத்தில் சில சிறுவர்கள் தளப்பந்து (base ball) விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஷாயா அந்தச் சிறுவர்கள் விளையாடுவதைப் பார்த்து தன் தந்தையிடம் கேட்டான். “அப்பா அவர்கள் என்னையும் அந்த விளையாட்டில் சேர்த்துக் கொள்வார்களா?”

அவருக்குத் தன் மகனால் அந்த விளையாட்டைத் திறம்பட விளையாட முடியாது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த சிறுவர்களோ மிகத் தீவிர ஈடுபாட்டுடன் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் சென்று கேட்கவே தயக்கமாக இருந்தாலும் அவர் முயற்சி செய்து பார்ப்பதில் தவறில்லை என்று எண்ணினார். தயக்கத்துடன் சென்று ஒரு சிறுவனிடம் கேட்டார். “என் மகனும் ஆட ஆசைப்படுகிறான். அவனையும் சேர்த்துக் கொள்வீர்களா?”

அந்த சிறுவன் ஷாயாவைப் பார்த்தான். பார்த்தவுடனேயே அவன் குறைபாடுள்ள சிறுவன் என்பதை அந்த சிறுவன் புரிந்து கொண்டான். தன் நண்பர்களைப் பார்த்தான். அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. அவன் ஷாயாவின் முகத்தில் தெரிந்த ஆர்வத்தைப் பார்த்து மனம் இளகியவனாக அவரிடம் சொன்னான். “நாங்கள் இப்போது எட்டாவது இன்னிங்க்ஸில் இருக்கிறோம். இப்போதே ஆறு ரன்கள் குறைவாக எடுத்து பின்னணியில் இருக்கிறோம். என்னுடைய டீமில் அவனைச் சேர்த்துக் கொள்கிறேன். ஒன்பதாவது இன்னிங்க்ஸில் அவனுக்கு பேட்டிங் தருகிறோம்”

அதைக் கேட்டு ஷாயாவின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்த்த தந்தையின் மனம் நிறைந்தது. ஷாயா அந்த விளையாட்டுக்காக கையுறையை மாட்டிக் கொண்டு மைதானத்தில் பெருமிதத்துடன் போய் நின்றான். ஆனால் அந்த விளையாட்டின் எட்டாவது இன்னிங்க்ஸிலன் இறுதியில் ஷாயாவை சேர்த்த அணி மூன்று ரன்கள் மட்டுமே பின்னணியில் இருந்தது. நன்றாக ஆடத் தெரிந்தவன் ஆடினால் அவர்கள் அணி வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஒரு இக்கட்டான கட்டத்தில் ஷாயாவை அவர்கள் ஆட விடுவார்களா என்ற சந்தேகம் அவன் தந்தைக்கு வந்தது.

ஆனால் சொன்னபடி ஷாயாவை ஆட அவர்கள் அனுமதித்தார்கள். ஷாயாவிற்கு அந்த பேட்டை சரியாகப் பிடிக்கவே தெரியவில்லை. அவனை ஆட அனுமதித்த சிறுவன் பேட்டை எப்படிப் பிடிக்க வேண்டும் என்று சொல்லித் தந்தான். பந்து எறியும் சிறுவன் சற்று முன்னால் வந்து அந்தப் பந்தை மென்மையாக வீசினான். அந்தப் பந்தை ஷாயா அடிக்க உதவ வேண்டும் என்பது அவன் எண்ணமாக இருந்தது. அந்தப் பந்தை அவன் அப்படி வீசியும் ஷாயாவால் பேட்டால் அடிக்க முடியவில்லை. அடுத்த முறை ஷாயாவின் அணிச் சிறுவன் ஒருவன் ஷாயாவுடன் சேர்ந்து பேட்டைப் பிடித்துக் கொண்டான்.

பந்தெறிபவன் அடுத்த முறையும் சற்று முன்னால் வந்து மென்மையாகவே வீசினான். ஷாயாவும், அவனுடைய சகாவும் சேர்ந்து இந்த முறை பந்தை அடித்தார்கள். அந்தப் பந்து குறைவான வேகத்தோடு ப்ந்தெறிபவன் காலடியில் வந்து விழுந்தது. அவன் அதை எடுத்து முதல் தளக்காரனிடம் எடுத்து வீசினால் ஷாயா ஆட்டமிழந்து அவன் அணியும் தோற்று விடும்.

ஆனால் அந்தப் பந்தெறிபவன் வேண்டுமென்றே அதை மிக உயரமாகத் தூர வீச ஷாயாவின் அணியினர் கத்தினார்கள். “ஷாயா ஓடு. வேகமாக முதல் தளத்துக்கு ஓடு...” ஷாயா இப்படியொரு நிலையை எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் ஒரு கணம் திகைத்து பின் தலை தெறிக்க ஓடினான். முதல் தளத்தை அவன் அடைந்த போது அந்தப் பந்தை எதிரணிச் சிறுவன் எடுத்தான். முதலில் பந்தெறிந்தவனுடைய எண்ணம் அவனுக்கும் புரிந்திருந்தது. ஒரு ரன் எடுத்து முடித்த நம்ப முடியாத மகிழ்ச்சியில் இருந்த ஷாயாவின் முகத்தைப் பார்த்தவன் அந்த பந்தை தன் அணிக்காரன் எளிதில் பிடிக்க முடியாதபடி வீசினான்.


மைதானத்தில் “ஷாயா ஓடு. இரண்டாம் தளத்திற்கு வேகமாக ஓடு” என்ற சத்தம் பலமாக எழுந்தது. ஷாயா மீண்டும் தன்னால் முடிந்த வரை தலை தெறிக்க ஓடினான். இப்படியே அந்த ஆட்டத்தில் ஷாயாவை நான்கு ரன்கள் எடுக்க வைத்தார்கள். ஷாயாவின் அணி வெற்றி பெற்றது..

நான்காவது ரன்னை எடுத்து முடித்த போது மைதானத்தில் பதினெட்டு ஆட்டக்காரச் சிறுவர்களும் ஷாயாவைத் தோள்களில் தூக்கி ஆட்ட நாயகனாகக் கொண்டாட ஷாயாவின் முகத்தில் தெரிந்த மட்டில்லாத மகிழ்ச்சியைக் கண்ட அந்த தந்தை கண்ணில் அருவியாகக் கண்ணீர் வழிந்தது.

அதைச் சொல்லும் போதும் அந்தத் தந்தை கண்களில் கண்ணீர். “அன்றைய தினத்தில் அந்த பதினெட்டு சிறுவர்களும் இறைவனின் படைப்பின் நிறைவை எனக்குத் தெரியப்படுத்தினார்கள். என் மகன் அது வரை அவ்வளவு மகிழ்ச்சியாகப் பெருமையுடன் நின்றதைக் காணும் பாக்கியம் எனக்கு இருக்கவில்லை. அந்த நாள் என் மகன் வாழ்விலும், என் வாழ்விலும் மறக்க முடியாத நாளாகி விட்டது....”
அந்த சிறுவர்களுக்கு ஒவ்வொரு விளையாட்டிலும் வெல்லத் துடிக்கிற வயது. அவர்களுக்கு வெற்றி மிக முக்கியம். வாழ்வில் பெரிய பெரிய சித்தாந்தங்கள் எல்லாம் அறிந்திருக்கும் வயதோ, பக்குவமோ இல்லாத வயதினர் அவர்கள். அவர்கள் அன்று முன்பின் அறியாத ஷாயா என்ற குறைபாடுள்ள சிறுவனிடம் காட்டிய அன்பும், பரிவும் ஒப்புயர்வில்லாதவை. அவர்கள் அந்தச் சிறுவனை வெற்றி பெறச் செய்த செயல் சாமானியமானதல்ல.

இது போன்ற செயல்களில் தான் உண்மையாக மனிதம் மிளிர்கிறது. அந்த விளையாட்டை ஷாயாவின் வீட்டார்கள் ஆடி அவனை வெற்றி பெறச் செய்திருந்தால் அது செய்தியல்ல. முன்பின் அறியாத சிறுவர்களிடம் இருந்து அந்த அன்பு பிறந்தது தான் வியப்பு. அது தான் மனிதம்.

இது போன்ற மனிதம் மிளிர பெரிய பெரிய தியாகங்கள் கூடத் தேவையில்லை. மிகப் பெரிய நிலையில் இருக்க வேண்டியதில்லை. தங்களைப் பெரிதும் வருத்திக் கொண்டு யாருக்கும் யாரும் எதுவும் செய்ய வேண்டியதில்லை. தினசரி வாழ்க்கையில் நம்முடைய அன்பான சிறிய செயல்களால், சிறிய விட்டுக் கொடுத்தல்களால் பெரிய மகிழ்ச்சியை அடுத்தவர்கள் மனதில் ஏற்படுத்த முடியும். அதுவே மனிதம்.

இந்த மனிதம் பலவீனர்களைப் பார்க்கிற போது பலசாலிகளுக்கு வந்தால், இல்லாதவர்களைப் பார்க்கிற போது இருப்பவர்களுக்குள்ளே எழுந்தால், வேதனையிலும், துக்கத்திலும் இருப்பவர்களைப் பார்க்கையில் அவற்றை நிவர்த்தி செய்ய முடிந்தவர்கள் மனதில் மலர்ந்தால் இந்த உலகம் சொர்க்கமாக அல்லவா மாறி விடும்! நம்மால் முடிந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் அது போன்ற ஒரு சொர்க்கத்தை உருவாக்க நாம் முயற்சிப்போமா?

++++++++++++++++++++++++++++++++++++++++++++

8 கருத்துகள்:

HVL சொன்னது…

//நான்காவது ரன்னை எடுத்து முடித்த போது மைதானத்தில் பதினெட்டு ஆட்டக்காரச் சிறுவர்களும் ஷாயாவைத் தோள்களில் தூக்கி ஆட்ட நாயகனாகக் கொண்டாட ஷாயாவின் முகத்தில் தெரிந்த மட்டில்லாத மகிழ்ச்சியைக் கண்ட அந்த தந்தை கண்ணில் அருவியாகக் கண்ணீர் வழிந்தது.

//
GREAT!

The ghost who walks சொன்னது…

Good one, nice concept for the Blog

P. Vishnu Vijayan

Unknown சொன்னது…

"இது போன்ற மனிதம் மிளிர பெரிய பெரிய தியாகங்கள் கூடத் தேவையில்லை. மிகப் பெரிய நிலையில் இருக்க வேண்டியதில்லை. தங்களைப் பெரிதும் வருத்திக் கொண்டு யாருக்கும் யாரும் எதுவும் செய்ய வேண்டியதில்லை. தினசரி வாழ்க்கையில் நம்முடைய அன்பான சிறிய செயல்களால், சிறிய விட்டுக் கொடுத்தல்களால் பெரிய மகிழ்ச்சியை அடுத்தவர்கள் மனதில் ஏற்படுத்த முடியும். அதுவே மனிதம்."

முற்றிலுமாக உண்மை,

arasu சொன்னது…

பேரன்புகெழுமிய செந்தில்

ஷாயாவின் முகத்தில் மகிழ்ச்சியை வெளிகொணர்ந்த அந்த சிறுவர்களின் இறைத்தன்மையை போற்ற வார்த்தைகளே இல்லை. ஷாயாவின் முகத்தில் தெரிந்த மகிழச்சியை படித்த போது கண்ணீர் வருவதை தவிர்க்க முடியவில்லை. வாடிய பயிர்களை கண்ட போதெல்லாம் வாட பழகுவோம்.

அன்பென்று கொட்டு முரசே

arasu சொன்னது…

அன்பு செந்தில்

ஷாயாவின் மகிழ்சியினை உருவாக்கிய சிறுவர்களின் அன்பினை நினைந்து கொண்டிருக்கையில் வசூல் ராஜா வின் கட்டிப்புடி வைத்தியம் நினைவிற்கு வந்தது.அன்பே சிவமும் கூட ........

இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கிறான்.பிரகல்லாதனிடம் அவன் தந்தை உன் இறைவன் எங்கு இருக்கிறான் என்று கேட்டவுடன் சிறுவன் ஏதாவதொரு இடத்தை சொல்லிவிடப்போகிறான் என்று இறைவன் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து இடத்திலும் நிறைந்துகொண்டனாம். இறைவன் ஓடோடி வருவதற்கு தயாராக இருக்கிறான். இறைவனை வரவழைப்பதற்கு பிரகல்லாதனின் அன்பு வேண்டும்.

அன்பென்று கொட்டுமுரசே

Thilak சொன்னது…

சிறிய விட்டுக் கொடுத்தல்களால் பெரிய மகிழ்ச்சியை அடுத்தவர்கள் மனதில் ஏற்படுத்த முடியும். அதுவே மனிதம்.

கபிலன் சொன்னது…

நன்றி HVL
நன்றி விஷ்ணு விஜயன்.(கல்லூரித்தோழர்.....)
நன்றி கந்தசாமி (ஹைதராபாத்-இல் என்னோடு குப்பை கொட்டியவர்)
நன்றி திருநா (என் அண்ணாச்சி...)
நன்றி திலக்..(கல்லூரித்தோழர்...அதையும் தாண்டி...இப்பதிவின் மூலவர்)

வருக வருக வருக.....

cheena (சீனா) சொன்னது…

அன்பின் கபிலன்

தமிழாசிரியரின் மகன் என்பதனௌ நிரூபிக்கிறிர்கள் - அவரது நூலகத்தினை அதிகம் பயன்படுத்தா விட்டாலும் - அதனருகில் இருந்த காரணத்தால் எழுத்து தன்னால் வருகிறது. படிக்கும் ஆர்வமும் எழுதும் ஆர்வமும் தங்கு தடையின்றி உண்டாகிறது. நல்லதொரு இடுகை. நன்று நன்று.

நியூயார்க் நிகழ்வு இப்பொழுது தான் எங்கோ படித்ததாக நினைவு.

நல்வாழ்த்துகள் கபிலன்
நட்புடன் சீனா

கருத்துரையிடுக

பேசுனா....பேர் எழுதுவேன்.....