செவ்வாய், 13 ஜூலை, 2010

முதல் அமெரிக்கப் பயணம்.....3

இங்கேருந்து கிளம்பி....  இப்டிக்கா வந்து... இங்கே நிக்கிறேனுங்க....

இருக்கை விட்டு எழுந்து... கொஞ்சம் நடந்தேன்... ஒரு காபி குடித்தால் தேவலாம் என்று முடிவு செய்து... அங்கிருந்த BRU நிலையத்தின் பெண்ணிடம் கேட்டேன்... மேலும் கீழும் பார்த்து...நாப்பது ரூபா..என்றார். ஒரு கணம் திகைத்து... பரவால்ல.. பையிலிருக்கும் முன்னூறு ரூபாய்க்கு இன்னும் ஒரு சில மணிகளில் எந்த மதிப்பும் இருக்கப்போவதில்லை... இதுக்காவது பயன்படட்டுமே...என்று..அந்த தங்க பஸ்பம் கலந்த காபியை பயபக்தியுடன் வாங்கினேன்.

எதிரே ரோஹினியும் அவர் பையனும்....ரோகினி இன்னும் செல்போனியபடி இருக்க... அந்த அமுல் பையன்..தீவிரமாக வீடியோ கேமில் எதையோ விரட்டிகொண்டிருந்தான்...

சிறு நடைக்கு பிறகு அந்த ஒரு அருமையான காட்சி..கண்ணில் பட்டது...நிச்சயம் என் பார்வையில் தான் கோளாறு என்று நினைக்கிறேன்... நமக்கு தான் எதையுமே நேரடியாக யோசிக்க தெரியாதே....

ஒரு பையன் ...ஒரு பொண்ணு....இருவரின் செல்போனும் பொதுவான சார்ஜரில் லைவாக இருக்க..எதிரெதிர் இருக்கையில் அமர்ந்து அவரவரின் எவரிடமோ வார்த்தைகளில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்... காதுக்கும் வாய்க்கும் தானே வேலை...கண்கள் வெட்டியாய்தானே இருக்கிறது நினைத்தார்களோ என்னவோ..... இவர்கள் இருவரும் கண்களில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியாக ஒரு நால்வரின் விளையாட்டை கடந்தேன்...

பாடகி கல்பனா...இரு காதுகளையும் இசை கொண்டு மூடி... கண்களால்... ஒரு புத்தகத்தை அளந்துகொண்டிருந்தார்.... அப்படியே பின்வாங்கி...வேறு வழியின்றி...நானும் எஸ்.ராவின் தேசாந்திரியை மூன்றாவது முறையாய் ஆரம்பித்தேன்.

பின்னர் நடந்தவை...ஒன்றும் நினைவில் இல்லை....மணி நாலை தொட்டது...ஐக்கிய அரபின் ஆஸ்தான எமிரேட்ஸில் வரிசையில் போய் இருக்கை தேடி அமர்ந்தேன்... கண்ணை சொருகினாலும் மறக்காமல் அவப்போது செயற்கையான பரிவுடன் நீட்டப்படும் அனைத்து பதார்த்தங்களையும் வயிற்றில் அடைத்தேன். என்னை கலந்தாலோசிக்காமல்.. ஆசியன் வெஜ்...என்று புக் செய்த அந்த முகமறியா நண்பரை...  அந்த நேரத்திலும் நான் திட்ட மறக்கவில்லை. விமானமே... ஆடுகளையும்... முட்டைகளையும்... அடித்து ஆடிகொண்டிருக்க.... நம் ரத்தவெறி தெரியாமல்... சிறப்பு உணவு என்று எனக்கு மட்டும் நீட்டப்பட்ட உருளைகிழங்குடன் அழுது.... எனக்கு மட்டும் ஏனிப்படி நடக்குது...இட்ஸ் ஓகே என்று என்னை நானே தேற்றி..

சில படங்கள் பார்த்தேன்...அரபிக் பாப் கேட்டேன்..இருக்கைக்கு மேல் இருக்கும் விளக்கை அணைக்க பலவாறாக முயன்று... கடைசியில்... எதேச்சையாக.. ரிமோட்டில் எதையோ அமுத்த... பட்டென அணைந்தது... இதல்லாம் சகஜம் தான்...என்பது...பக்கத்து சீட்டில் ரிமோட் வயருடன் போராடி கொண்டிருந்தவரை பார்த்ததும் உண்டானது. முன்னொரு விமான பயணத்தில் சீட் பெல்ட்டுடன் போராடியதற்கு இது பரவாயில்லை என்று நினைத்தவாறே உறங்கிப்போனேன்.

காலை வெளிச்சத்தில் பாலைகளை ரசித்தபடியும் தக்கனூண்டாய் தெரியும் கட்டடங்களை விழி விரிய பார்த்தும் ஏழுமணி சுமாருக்கு துபையில் இறங்கி... உஸ் அப்பா அங்கும் ஒரு பாதுகாப்பு சோதனை.... டவுசரை தவிர... அதை கழட்டு... இதை கழட்டு என்று... ஷுவிலிருந்து கை காப்பு வரை கழட்ட வைத்து... லேசாக படுத்தினார்கள்.... எல்லாம் நம் பாதுகாப்புக்குத்தானே என நினைக்க கொஞ்சம் சந்தோஷமாகவே ஒத்துழைத்தேன்.. இல்லாவிட்டால்... ஒத்துழைக்க வைக்கபடுவேன்... இந்த தீவிரவாத பசங்களை நினைக்க கொஞ்சம் ஆச்சரிய மாகத்தான் இருந்தது... இந்தனை பாதுகாப்பு வளையங்களையும் தாண்டி... எப்படித்தான் ஊர் ஊரா போயி குண்டு வைக்கிரானுகளோ...அப்படி ஒரு கொலைக் கொள்கை வெறி...

இந்தாங்க உங்க பெல்ட்...மறந்துட்டீங்க...என்று பெருந்தன்மையுடன் முன்னால் போகும் பெண்ணுக்கு எடுத்து கொடுத்தேன்..நான் மறக்கலை...இருந்தாலும் நன்றி என்றார்....அட...மீண்டும் கல்பனா. நியூயார்க்கா போறீங்க என்றேன்... சான்பிரான்சிஸ்கோ என்றார்... அப்படியா... என்ன கோவோ அது என நினைத்தவாறே... ஹாப்பி ஜேனி என்றேன்... புன்னகைத்து விடை பெற்றார்.

தலையை சற்று லேசாக தூக்கியவாறே துபாய் விமான நிலையத்தை முன் பின்னாக இரண்டுமுறை அளந்து...ஒருவழியாக...அடுத்த விமானம் புறப்படும் இடத்தை அடைந்தேன்.

ஒரு மணிநேர காத்திருப்புக்குப் பின் அடுத்த பறவைக்குள் நுழைந்தேன்.....

(இன்னும் பேசுவோம்......) ___/\___

ஞாயிறு, 11 ஜூலை, 2010

அஞ்சலி...



எங்கள் அலுவலக மற்றும் குடும்ப நண்பர் திரு சுந்தர்ராஜன் அவர்களின் தந்தையார் திருமிகு சுப்பிரமணியன் அவர்கள் எதிர்பாராத ஒரு சாலை விபத்தில் நாகர்கோவிலில் இயற்கை எய்தினார்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு எங்கள் அலுவலகம் சார்பிலும்
எனது குடும்பத்தார் சார்பிலும் "ஒன்பதாம் வகுப்பு ஈ பிரிவு" தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் அஞ்சலியையும் சமர்ப்பிக்கிறது.

செவ்வாய், 6 ஜூலை, 2010

முதல் அமெரிக்கப் பயணம்....2

இங்கிருந்து புறப்பட்டேன்.....


உள்ளே நுழைந்த எனக்கு நேரம் பற்றிய என் பார்வைகள் யாவும் மாறியிருந்தன. கண்ணை சொருகிக்கொண்டு வரும் நேரத்தில் ...எப்படி இந்த சின்ன பெண்கள் எல்லாம் இவளவு சுறுசுறுப்பாய் இருக்கிறார்கள்.

நான் குறட்டை விடும் நேரத்தில் இவர்கள் பணியின் நிமித்தம் முகம் தெரியாத பயணிகளை புன்னகைத்தும் வழிகாட்டியும் வளைய வருகிறார்கள். "எகனாமிக் கிளாஸ்-ன்னா இந்த பக்கம் வாங்க சார். இது உங்க வரிசை" என்றார். எனக்கு TITANIC ஞாபகம் வந்தது.

வரிசையில் நிற்பவர்களை வேடிக்கை பார்த்தவாறே என் ட்ராலியுடன் நகர்ந்தேன். சற்று குட்டையாக..தீர்கமாக..அரக்கு ஜீன்சும் வைட் டாப்ஸ்மாக செல்போனியபடி ஒரு நடுத்தர வயது பெண்ணும் ஒரு 13 வயது மதிக்கத்தக்க ஒரு பையனும் என் பின்னல் வந்து நின்றார்கள்.

பையன் நல்ல கலர்.ஹைட் அண்ட் வெய்ட்டாக இருந்தான். மறுபடியும் படத்தில் ஆசை அதிகம் வச்சு என்று ஆடிய பெண் ...மகளிர் மட்டுமில் கலக்கிய பெண், விருமாண்டியில் கமலை பேட்டியெடுத்த பெண்...இவ்வளவு அருகில்...ஹல்லோ என்று சொல்ல நினைத்து ஏனோ தவிர்த்தேன். ரகுவரனின் ஏழாவது மனிதன் "காக்கை சிறகினிலே" நினைவுக்கு வந்தது..

தொல்லைகள் இல்லாமல் பொதிகளை செக் இன் செய்து....இமிக்ரேஷன் என்னும் போருக்கு தயாரானேன். பல பேர் பல மாதிரி பயமுறுத்தி வைத்திருந்தார்கள். நிராகரித்து என்னை இப்படியே திருப்பி அனுப்பினாலும் சந்தோஷமே என்ற நினைப்பில் "நெக்ஸ்ட்" என்ற அம்மையாரிடம் போய் நின்றேன்.

என் முகத்தை கூட பார்க்காமல் கேள்விகள் கேட்டபடி..நம் கடவு சீட்டை நோட்டமிட்டார்...அதில் என் கருப்பு வெள்ளை புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தவராக...நிமிர்ந்தார். பாவம் பையன் பாஸ்போர்ட் எக்ஸ்பெரி ஆகும்போது ஏர்போர்ட் பக்கம் வந்துருக்கான். பொழச்சு போறான் என்று விட்டாரோ என்னவோ...விட்டது கருப்பு என்று ஒரே ஓட்டமாக எஸ்கலேட்டர் தவிர்த்து இரண்டிரண்டு படிகளாக தாவி அலுமினிய பறவைகளின் கூடாரம் வந்தேன். அதான் சார்...என்னமோ சொல்வாங்களே... போர்டிங் ஏரியாவா....அதுதான்.

வேண்டா வெறுப்புடன் நம்மை கருவி கொண்டு சோதித்து..... போய்த்தொலைடா என்றவாறு கடவில் ஒரு முத்திரை பதித்து வேண்டாத வஸ்துவைப்போல் லேசாக தூக்கி போட்டார் முகம் நினைவுறுத்த முடியாத அந்த காக்கி. இங்கல்லாம் மூஞ்சிய காமிச்சா டவுசர் கிழிந்துவிடும் என்று மிகுந்த புன்னகையுடன் எடுத்து "நன்றி" என்று வந்தேன்.

வீட்டுக்கு தொலைபேசி அனைத்தும் சுபமாக முடிந்தது...என்று என் மனைவியின் கடைசி நம்பிக்கையில் மண்ணை போட்டு...இன்னும் ஒரு மூணு மணிநேரம் இங்கே காத்திருக்கணும் என்ற பேரதிர்ச்சி விலக்க வழக்கம்போல் நம் வேடிக்கை பார்க்கும் பழக்கத்துடன் கைகொடுத்துக்கொண்டேன்.

தூக்கம் அப்பிய முகங்கள்...வழக்கமான சொகுசு தூக்கம் கிடைக்காத எரிச்சலில் அழுது அரற்றும் குழந்தைகள்...புத்தகங்களுக்குள் முகம் புதைத்த யுவதிகள்...இது ஒன்றும் பயப்பட கூடிய வஸ்து இல்லை என்று காக்கிகளிடம் தன் வாழை இலை பார்சலை பிரித்துக்காட்டும் சக பயணி.... அயல்நாட்டிலிருக்கும் தன் பிள்ளைகளிடம் ஒழுங்காய் போய் சேர்வோமா என்ற கவலை ரேகை முகங்களுடன் சில பெற்றோர்.... குடும்பச்சுமை தூக்க... பாலைவன பிரதேசங்களுக்கு பயணமாகும் சில தம்பிகள்..... எனக்குள் ஒரு கதம்பான மனநிலையை உண்டாக்கியவாறு அவரவர் வேலையை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

பின்னால் என் தோள் தட்டி ஒரு சீட்டை நீட்டினார் அந்தப்பெண். கிராமத்திலிருந்து வருகிறார் எனபது அவர் தோற்றத்திலேயே தெரிந்தது.
என்னம்மா...என்றேன். தெலுங்கில் ஏதோ சொன்னார்... காட்டிய சீட்டில் ஒரு செல்போன் எண். யாரையோ அழைக்க நினைக்கிறார் என்று எளிதாக புரிந்துகொண்டு... செல்போனை கொடுத்தேன்.... அவர் மீண்டும் அந்த சீட்டை காட்டியபடி இருந்தார். டயல் செய்யக்கூட தெரியவில்லை என்ற அவரை பார்க்க கஷ்டமாக இருந்தது. என்ன சூழலில் எங்கு பயணம் செய்கிறார் என நினைக்க கொஞ்சம் பெருமூச்சு விடத்தான் முடிந்தது. டயல் செய்து அவரிடம் கொடுத்தேன். சந்தோஷமாக யாரோ ஒருவருடன் தெலுங்கில் பேசினார். அடுத்தவர் பொருளை உபயோகிக்கிறோம் என்ற அவரின் பதட்டம் படித்தவர்களிடம் கூட சில நேரம் காணமுடியாதது. சுருக்கமாக முடித்துக்கொண்டு முகம் மலர ஏதோ பாபு என்றார். நன்றி சொல்வதாக எடுத்துக்கொண்டேன்.

பாடகி கல்பனாவை தேடினேன். நம் இசை ரசனை ஆர்வத்தை அவரிடம் சொல்லி...நெஞ்சம் மறப்பதில்லையில் (கலைஞர் டிவி தொடர்) அவர் பாடிய பாடல்களை நினைவு படுத்தியவாறு...தேடினேன்..அவரின் "கடவுள் தந்த அழகிய வாழ்வு" எனக்கு மிகவும் பிடித்த ஒன்று...
 
(இன்னும் பேசுவோம்......) ___/\___

ஞாயிறு, 4 ஜூலை, 2010

எங்கிருந்தோ வந்தான்....2

இரண்டு பதிவுகளுக்கு தொடரும் போட்டாச்சு.....

நிறைய டைப் செய்ய கடினமாக இருக்கிறது...உங்களுக்கு படிப்பதும்..(இது கொஞ்சம் ஓவர்...ok..அந்த நாலு பேருக்கு...) மேலும் இப்போது கிடைக்கும் நேரம்...சென்னை சென்றதும் இருக்குமா என தெரியவில்லை..

இருப்பினும் மனம் தளராமல் முயற்சிக்கிறேன்....இன்னும் பகிர அநேக விடயங்கள் என் குறிப்பேடுகளில் உள்ளன....

ஓகே ...லெட்ஸ் கெட் இன் டு சப்ஜெக்ட்....

எங்கிருந்தோ வந்தான்....2


எங்கிருந்து  எனில்...இங்கிருந்து வருகிறான்...


"பிள்ளையார் பட்டி அழகே தனிதான் என்னடா சொல்ற...?"

"ஆமா.....சின்ன கிளாஸ் படிக்கும்போது அப்பாவோட வந்திருக்கேன்....குன்றக்குடி அடிகளாரை பார்க்க.. திருப்புகழ் சொல்லி பாராட்டெல்லாம் வாங்கினேன். அப்புறம் இங்க மோதகம்-ன்னு ஒன்னு குடுப்பாங்க..கொழுக்கட்டை மாதிரி..நல்ல டேஸ்ட்"

"பரவால்லையே...நிறைய ஞாபகம் வச்சுருக்க....."

"நம்ம பலமும் அதுதான்...பலவீனமும் அதுதான்...."

"குமரன்...என்ன பண்ணிக்கிட்டு இருப்பார்.....?"

"என்ன பண்ணுவார்...குப்புறடிச்சு தூங்கிகிட்டு இருப்பார்...நீ அவருக்கு கொஞ்சம் ஓவரா இடம் தர்றியோ-ன்னு தோணுது."

"கம்மான் சரவணன்....ஒரு புது ஆள்...நம்ம ஊருக்கு..ஏதோ நம்மளால முடிஞ்சது....இந்த பொட்ட காட்டுல நம்மளா சுத்திகிட்டு இருப்போம்.இப்போ புதுசா ஒரு ஆளோட அறிமுகம்...நல்லதுதானே...நீயும் கம்போர்டா பீல் பண்ணுவன்னு நினைச்சேன்..."

"டேய்..அப்படியில்லடா...நேத்துதான் பாத்தோம் அதுக்குள்ள கொஞ்சம் ஓவரா நெருக்கம் காட்டுரோமே....அவர் யாரு..எந்த வூரு...ஆள் எப்படி....நமக்கு ஏதும் பிரச்னை வரக்கூடாது பாரு..? அதுக்குத்தான்."

"உன் மண்டைய கொஞ்சம் பினாயில் ஊத்தி கழுவு....ஒரு இன்ஜினியரிங் கிராஜுவேட். அதுவும் எம்.டெக். அவர்தான் நம்மள அநீசியா பீல் பண்ணனும். என்ன பிரச்னை வரும்..."

"சாரிடா..."

"ஓகே..ஓகே..ஆள் கொஞ்சம் குட்டை..நல்ல கருப்பு...குண்டு...ஆனா முகம் மட்டும் நல்ல களை. நல்லா சிரிக்கிறார்ல...உன்னை மாதிரி."

"முகம் கொஞ்சம் விவேக் சாயலா இருக்கு...நல்லா பேசுறார்....அவன் யார்ரா....அவரோட பிரண்ட்...என்னமோ ஓவரா படம் போடுறார்....நான் சமைப்பேன்..அவன் வெளில சாப்பிடுவான்...அப்படின்னு.."

"என்ன லூசு கதை இருக்கோ..அதுக்குள்ள....நாமளும் ஒரு எட்டு வருஷமா பழகுறோம்...ஒரு தடவை சண்டை போட்டிருப்போமா..."

"மறந்துட்டீங்களா சார்....பத்தாவது படிக்கும்போது ஒரு சண்டை...காரணமெல்லாம் மறந்துபோச்சு...ஆனா கொஞ்ச நாள் பேசாம இருந்திருக்கோம்..அம்மா தான் சேத்து வச்சாங்க...."

"அட ஆமால்ல..."

"நீதாண்டா ரொம்ப வீராப்பா இருந்த...நான் கொஞ்சம் செண்டிமெண்ட்..நீ அப்படியில்லை."

"நானும் அப்படி இருந்தேன்னா...உன்னமாதிரி..அப்பப்போ கவிதை அது இதுன்னு புலம்பி அழுதுக்கிட்டு இருப்பேன்."

"உனக்கு வராத ஒரு விஷயத்துக்கு என்னை ஏண்டா இழுக்குற....பட் நீதான் நம்ம முதல் ரசிகர்."

"படம்லாம் ஏதும் வரையிரியா....நீ எனக்கு லெட்டர் போடும்போது கவர்ல வரையிற படத்தை பார்க்கவே காலேஜ்ல...ஒரு பட்டாளமே இருக்கும். சார்க்கு படம் போட்டு அவர் காதலிகிட்டே இருந்து லெட்டர் வந்துருச்சுடான்னு கிண்டல் பண்ணுவாங்க...."

"எஸ்....தனியா இருக்கும்போது....அதை சமாளிக்க....அப்படி சும்மா வரைவேன்...அதை செய்யும்போது...பார்த்து நீங்கள் எப்படி ரசிப்பீர்கள் என்று கற்பனை செய்துகொண்டே இருப்பேன்.அந்த சுகம் எனக்கு நானே உருவாக்கிகிட்டது...ஒரு போதை மாதிரி.."

"ஹல்லோ ஏதோ சுமாரா காப்பி அடிச்சு வரைவ...என்னமோ ரவிவர்மா ரேஞ்சுக்கு பீல் குடுக்குற....டேய்..டேய்...நோ...கை வலிக்குதுடா.....நீ வரஞ்ச அந்த பெண்ணோட முகம் நல்லா இருந்துச்சு...அப்புறம்...அந்த பட்டர்ப்ளை...அவ்வளவுதான்....ஞாபகம்.."

"ஒகே பாஸ்..ரொம்ப நேரம் ஆச்சு.. அம்மா பிள்ளையார்ட்ட பேசி முடிசுட்டங்களான்னு பாத்துட்டு வர்றேன்."

"எங்க வீட்ல எங்கடா போனாங்க....."

"அங்க பாரு...அந்த பாறைல உக்காந்துருக்காங்க....."

"சேரி சீக்கிரம் வா....பசிக்கிது......சாப்பிடலாம்...."

(வருவார்கள்.......)

                                           #@#

சனி, 3 ஜூலை, 2010

முதல் அமெரிக்கப் பயணம்.......

19-04-2010.....திங்கள்....

"உங்களுக்கு இன்னைக்கு ஒரு கிளையன்ட் இண்டர்வியு இருக்கு. ரெடியா இருங்க" என்று மேலாளர் சொன்னதும் ஒரு குறுகுறுப்பு தொற்றிக்கொண்டது.

அமெரிக்கா போணுமா....இந்த சாப்ட்வேர் பசங்கல்லாம் டீ சாப்பிட போறதுமாதிரி போய்ட்டு வருவான்களே அங்கயா?

போன முறை விசா எடுத்து பின்னால் ப்ராஜெக்ட் கான்சல் ஆனது மாதிரி ஏதும் நடக்குமோ? நம்ம ராசி அப்படி.

போன்றவாறு மனதுக்குள் நிறைய ஓடியது.

மாலை இண்டர்வியு.....சப்பையாக அது முடிந்ததும்.... இதுக்கா இவ்வளவு படம்.....என்றவாறு தாமதமாக குடும்பத்தை யோசித்தேன்.

வாண்டு இப்போதான் பள்ளிக்கூடம் போகுது. இன்னொரு வாண்டுக்கு 30 வயசாகுது..... சண்டை பிடித்து கட்டிக்கொள்ள ஒரு மூன்று மாதம் நானிருக்க மாட்டேன் என்றதுமே கிலியானார்கள்.

சின்னப்புள்ள தனமா ஒரு 28 லட்சம் லோன் போட்டு கட்டுற வீடு....நான் வளர்வதை பார்க்க உனக்கு கொடுப்பினை இல்லை என்று நேற்று வைத்த சன்னலின் வழி சிரித்தது. வாழ்க்கையில் ஒரு முறை தான் நான். நானா அமெரிக்காவா? என்று அது கேட்பதை போல் தோன்றியது.

வாழ்க்கையை மாத சம்பளத்திடம் கொடுத்துவிட்ட பிறகு....எனக்கான முடிவுகள் பெரும்பாலும் என் கைகளில் இருப்பதில்லை. அது காட்டும் வழியில் ஓடுவதை தவிர வேறு வழியில்லை. நாய் மாதிரி வேலை வாங்கி சம்பளம் கூட கொடுக்காமல் அலைக்கழித்த முன்னாள் கம்பனிகளும், டிப் டாப்பாக அழகிய ஆங்கிலத்தின் வழி நம் சுயமரியாதையை சோதித்த முன்னாள் மேலாளர்களும் நினைவில் வந்தார்கள். அதுக்கு இது ஆயிரம் மடங்கு தேவலாம்.

வேற அல்டேர்நெட் எதுவும் முடியாதா? என்று மேலாளரிடம் கேட்டபோது.....என்னால் மட்டுமே அமெரிக்காவுக்கு ஒரு விடிவு பிறக்கும் என்பதைப்போல் நம்பிக்கை ஊட்டி....ஆக வேண்டிய வேலையைப்பார் என்றார். டிக்கெட் சொல்லிரு...ஒரு நாள்ல பண்ணிருவாங்க...நாளைகழிச்சு ஏறிரலாம்..என்றவர் கடந்து போனதை கண்களை அகல விரித்து பார்க்க மட்டுமே முடிந்தது.

குடும்பத்தார் அனைவரையும் தேற்றி....அரைகுறையாக பாக்கிங் செய்து...குக்கர் எடுத்து வைக்கும்போது என் சுடுதண்ணி சமையல் நினைவுக்கு வந்தது. எல்லாம் தெரிஞ்சா ஏதும் நடக்குது...இதுவும் கடந்துபோகும் என நானே சமாதானம் செய்துகொண்டு .... ஆயத்தமானேன்.

நானும் உன்னோட ப்ளைட்ல அமெரிக்கா வருவேன் என்று மதியத்திலிருந்து காலை சுற்றிவந்த பிள்ளை அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தது. கன்னத்தை லேசாக தட்டி ஒரு முத்தம் கொடுத்து வரட்டுமா என்றவனின் வார்த்தைகளை பொருட்படுத்தாது விமான நிலையத்தின் நள்ளிரவு வெளிச்சத்தை கண்கள் விரிய பார்த்து...... எங்கிருக்கிறோம் என தெரியாமல் முழித்தது.

பக்கத்தில் படபடவென நண்பர்களிடம் பொரிந்து கொண்டிருந்த அந்த பெண்ணை நாங்கள் அனைவருமே திரும்பிப்பார்த்தோம். எங்கயோ பார்த்திருக்கோமே என்றபடி அம்மா குழம்ப...பாடகி கல்பனா...என்றேன் என் இசை ஞானத்தின் வழி. நீங்க நல்லா பாடுறீங்க என்ற அம்மாவை பார்த்து சிநேகத்துடன் சிரித்தார் கல்பனா.

அப்பா, அம்மா, மனைவி, குழந்தை கை அசைக்க....அந்த வரலாற்று நிகழ்வு அரங்கேறியது.....

மீனம்பாக்கம் விமான நிலையம் தன் வழக்கமான பரபரப்புடன் என்னை உள்வாங்கியது.....


(இன்னும் பேசுவோம்......)

வெள்ளி, 2 ஜூலை, 2010

55 வார்த்தை கதைகள் - இன்னும் சில......

போன பதிவில் எழுதிய கதைகளே தேவலாம் என்ற எண்ணம், இவைகளை படிக்கும் போது உங்களுக்கு தோன்றினால், கையக்குடுங்க....எனக்கும் அதே....அதே....

பின்னூட்டமிட்ட அந்த ஆறு பேருக்கு நன்றி.

போலாமா.........ரை......ரை........


சகுனம்.......


அலுவலகத்தில் அவனால் இயல்பாய் இருக்கமுடியவில்லை.

இன்றைக்கு உணவு இடைவேளையில் எப்படியும் ஆஷாவிடம் சொல்லிவிடவேண்டும் என்று முடிவு செய்தான்.

என்ன சொல்வாளோ என்ற பதட்டம் மணி ஒன்றை தொட்டதும் இன்னும் எகிறியது. சுற்றும் முற்றும் பார்த்து ஆஷாவின் அறைக்குள் நுழைந்தான்.

செர்ரிகளை கடித்தவாறே புத்தகம் படித்துக்கொண்டிருந்தாள்.

சொல்லுங்க மகிழ்" என்றவளுக்கு பதிலேதும் சொல்லாமல் வந்த வேகத்தில் வெளியேறினான்.

கண்களை உருட்டி, உதடை சுழித்து மீண்டும் புத்தகத்தில் மூழ்கினாள் ஆஷா.

"ஹௌ டு சே நோ....."

                      +++


தனியே தன்னந்தனியே...


"உங்க வொய்ப் இப்போ வந்தா அவ்வளவுதான்"

"அவளுக்கு என்னை பத்தி தெரியும்"

"என்ன சொல்வீங்க?"

"என்னமோ சொல்வேன்?..நீ எதுக்கு வந்த அத சொல்லு?"

"டிங் டாங்.."

"உங்க வொய்ப் தான்......போயி கதவை திறங்க."

உள்ளே நுழைந்த வித்யா ஒரு வினாடி அந்த காட்சியை பார்த்தாள்.

எதுவும் பேசாமல் அதை தேடினாள்.

சமயலறையில் இருந்தது.

எடுத்து...

டிவியை நிறுத்தினாள்.

                                  +++

யாரது...


"இவரை எங்கோ பார்த்திருக்கிறோமே?

முயற்சி செய்தும் யூகிக்க முடியாமல் எரிச்சலானாள் நந்தினி.

மீண்டும் சட்டென திரும்பினாள்.
அவரைக் காணவில்லை.

அந்த யோசனை அவளை அலைக்கழித்தது.

சட்டென பொறி தட்டியது..."

போகலாமா என்றவனை நிமிர்ந்து பார்த்து
பிளீஸ்...இன்னும் ஒரே ஒரு பக்கம் என்றாள் என் மனைவி.

                           +++


அந்த நொடி.....

சுந்தருக்கு வியர்த்துக் கொட்டியது.

மனதுக்குள் தைரியத்தை வரவழைத்து வரட்டும் பார்க்கலாம் என்றான்.

ஆக்ரோஷமாக வந்தது அது.

கடைசி நொடி....

கண்களை அகல விரித்து
முழு பலத்தையும் பிரயோகித்தான்.

நடந்ததை உணர முடியாமல் தரையில் விழுந்தான்.

சிலபேர் ஓடிவந்து அவனைத் தூக்கிச் சென்றார்கள்.

கடைசி பந்தில் சதமடித்தான்.
அணியும் வென்றது.

கபிலனும் மகிழ்ந்தான்.
கதையும் முடிந்தது.

               +++

கொலை வெறியுடன் என்னை அடிப்பதற்கு கை ஓங்கினால்......

உங்களுக்கு இங்கே ஒரு சுகம் காத்திருக்கு.

            +++