செவ்வாய், 6 ஜூலை, 2010

முதல் அமெரிக்கப் பயணம்....2

இங்கிருந்து புறப்பட்டேன்.....


உள்ளே நுழைந்த எனக்கு நேரம் பற்றிய என் பார்வைகள் யாவும் மாறியிருந்தன. கண்ணை சொருகிக்கொண்டு வரும் நேரத்தில் ...எப்படி இந்த சின்ன பெண்கள் எல்லாம் இவளவு சுறுசுறுப்பாய் இருக்கிறார்கள்.

நான் குறட்டை விடும் நேரத்தில் இவர்கள் பணியின் நிமித்தம் முகம் தெரியாத பயணிகளை புன்னகைத்தும் வழிகாட்டியும் வளைய வருகிறார்கள். "எகனாமிக் கிளாஸ்-ன்னா இந்த பக்கம் வாங்க சார். இது உங்க வரிசை" என்றார். எனக்கு TITANIC ஞாபகம் வந்தது.

வரிசையில் நிற்பவர்களை வேடிக்கை பார்த்தவாறே என் ட்ராலியுடன் நகர்ந்தேன். சற்று குட்டையாக..தீர்கமாக..அரக்கு ஜீன்சும் வைட் டாப்ஸ்மாக செல்போனியபடி ஒரு நடுத்தர வயது பெண்ணும் ஒரு 13 வயது மதிக்கத்தக்க ஒரு பையனும் என் பின்னல் வந்து நின்றார்கள்.

பையன் நல்ல கலர்.ஹைட் அண்ட் வெய்ட்டாக இருந்தான். மறுபடியும் படத்தில் ஆசை அதிகம் வச்சு என்று ஆடிய பெண் ...மகளிர் மட்டுமில் கலக்கிய பெண், விருமாண்டியில் கமலை பேட்டியெடுத்த பெண்...இவ்வளவு அருகில்...ஹல்லோ என்று சொல்ல நினைத்து ஏனோ தவிர்த்தேன். ரகுவரனின் ஏழாவது மனிதன் "காக்கை சிறகினிலே" நினைவுக்கு வந்தது..

தொல்லைகள் இல்லாமல் பொதிகளை செக் இன் செய்து....இமிக்ரேஷன் என்னும் போருக்கு தயாரானேன். பல பேர் பல மாதிரி பயமுறுத்தி வைத்திருந்தார்கள். நிராகரித்து என்னை இப்படியே திருப்பி அனுப்பினாலும் சந்தோஷமே என்ற நினைப்பில் "நெக்ஸ்ட்" என்ற அம்மையாரிடம் போய் நின்றேன்.

என் முகத்தை கூட பார்க்காமல் கேள்விகள் கேட்டபடி..நம் கடவு சீட்டை நோட்டமிட்டார்...அதில் என் கருப்பு வெள்ளை புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தவராக...நிமிர்ந்தார். பாவம் பையன் பாஸ்போர்ட் எக்ஸ்பெரி ஆகும்போது ஏர்போர்ட் பக்கம் வந்துருக்கான். பொழச்சு போறான் என்று விட்டாரோ என்னவோ...விட்டது கருப்பு என்று ஒரே ஓட்டமாக எஸ்கலேட்டர் தவிர்த்து இரண்டிரண்டு படிகளாக தாவி அலுமினிய பறவைகளின் கூடாரம் வந்தேன். அதான் சார்...என்னமோ சொல்வாங்களே... போர்டிங் ஏரியாவா....அதுதான்.

வேண்டா வெறுப்புடன் நம்மை கருவி கொண்டு சோதித்து..... போய்த்தொலைடா என்றவாறு கடவில் ஒரு முத்திரை பதித்து வேண்டாத வஸ்துவைப்போல் லேசாக தூக்கி போட்டார் முகம் நினைவுறுத்த முடியாத அந்த காக்கி. இங்கல்லாம் மூஞ்சிய காமிச்சா டவுசர் கிழிந்துவிடும் என்று மிகுந்த புன்னகையுடன் எடுத்து "நன்றி" என்று வந்தேன்.

வீட்டுக்கு தொலைபேசி அனைத்தும் சுபமாக முடிந்தது...என்று என் மனைவியின் கடைசி நம்பிக்கையில் மண்ணை போட்டு...இன்னும் ஒரு மூணு மணிநேரம் இங்கே காத்திருக்கணும் என்ற பேரதிர்ச்சி விலக்க வழக்கம்போல் நம் வேடிக்கை பார்க்கும் பழக்கத்துடன் கைகொடுத்துக்கொண்டேன்.

தூக்கம் அப்பிய முகங்கள்...வழக்கமான சொகுசு தூக்கம் கிடைக்காத எரிச்சலில் அழுது அரற்றும் குழந்தைகள்...புத்தகங்களுக்குள் முகம் புதைத்த யுவதிகள்...இது ஒன்றும் பயப்பட கூடிய வஸ்து இல்லை என்று காக்கிகளிடம் தன் வாழை இலை பார்சலை பிரித்துக்காட்டும் சக பயணி.... அயல்நாட்டிலிருக்கும் தன் பிள்ளைகளிடம் ஒழுங்காய் போய் சேர்வோமா என்ற கவலை ரேகை முகங்களுடன் சில பெற்றோர்.... குடும்பச்சுமை தூக்க... பாலைவன பிரதேசங்களுக்கு பயணமாகும் சில தம்பிகள்..... எனக்குள் ஒரு கதம்பான மனநிலையை உண்டாக்கியவாறு அவரவர் வேலையை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

பின்னால் என் தோள் தட்டி ஒரு சீட்டை நீட்டினார் அந்தப்பெண். கிராமத்திலிருந்து வருகிறார் எனபது அவர் தோற்றத்திலேயே தெரிந்தது.
என்னம்மா...என்றேன். தெலுங்கில் ஏதோ சொன்னார்... காட்டிய சீட்டில் ஒரு செல்போன் எண். யாரையோ அழைக்க நினைக்கிறார் என்று எளிதாக புரிந்துகொண்டு... செல்போனை கொடுத்தேன்.... அவர் மீண்டும் அந்த சீட்டை காட்டியபடி இருந்தார். டயல் செய்யக்கூட தெரியவில்லை என்ற அவரை பார்க்க கஷ்டமாக இருந்தது. என்ன சூழலில் எங்கு பயணம் செய்கிறார் என நினைக்க கொஞ்சம் பெருமூச்சு விடத்தான் முடிந்தது. டயல் செய்து அவரிடம் கொடுத்தேன். சந்தோஷமாக யாரோ ஒருவருடன் தெலுங்கில் பேசினார். அடுத்தவர் பொருளை உபயோகிக்கிறோம் என்ற அவரின் பதட்டம் படித்தவர்களிடம் கூட சில நேரம் காணமுடியாதது. சுருக்கமாக முடித்துக்கொண்டு முகம் மலர ஏதோ பாபு என்றார். நன்றி சொல்வதாக எடுத்துக்கொண்டேன்.

பாடகி கல்பனாவை தேடினேன். நம் இசை ரசனை ஆர்வத்தை அவரிடம் சொல்லி...நெஞ்சம் மறப்பதில்லையில் (கலைஞர் டிவி தொடர்) அவர் பாடிய பாடல்களை நினைவு படுத்தியவாறு...தேடினேன்..அவரின் "கடவுள் தந்த அழகிய வாழ்வு" எனக்கு மிகவும் பிடித்த ஒன்று...
 
(இன்னும் பேசுவோம்......) ___/\___

9 கருத்துகள்:

சஞ்சயன் சொன்னது…

பயணத்தை ரசித்து எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

அமெரிக்க போனாலும்,பாபு விடல போல.ஆனா தெலுங்கு ஒரு சங்கீத மொழி.அத விட்டு வந்த பெறவு தான் தெரியுது.
பிரிச்சு மேயுறேங்க,தொடருங்கள்....

kandasamy.s

HVL சொன்னது…

//சின்னப்புள்ள தனமா ஒரு 28 லட்சம் லோன் போட்டு கட்டுற வீடு....நான் வளர்வதை பார்க்க உனக்கு கொடுப்பினை இல்லை என்று நேற்று வைத்த சன்னலின் வழி சிரித்தது.//

//வீட்டுக்கு தொலைபேசி அனைத்தும் சுபமாக முடிந்தது...என்று என் மனைவியின் கடைசி நம்பிக்கையில் மண்ணை போட்டு...//

ரசிக்கும் படி இருக்கு. என்னும் எழுதுங்க!

கபிலன் சொன்னது…

அன்பின் விசரன்...
அருமை கந்தசாமி....
நட்பின் HVL .....
மிக்க நன்றி வருகைக்கும் ஊக்கத்திற்கும்.

-அன்புடன் கபிலன்.

மங்குனி அமைச்சர் சொன்னது…

நல்ல ரைட்டிங் ஸ்டைல் சார் , உங்க முகப்பு போட்டோ உங்க தலைப்புக்கு பொருத்தமா இருக்கு

கபிலன் சொன்னது…

ககக போ.....மங்குனி அமைச்சரே......
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அமைச்சரே...

சௌந்தர் சொன்னது…

Google Connect வையுங்கள் தல

கபிலன் சொன்னது…

அன்பின் சௌந்தர்..அப்பிடின்னா... எப்படி...?
அதையும் சொல்லுங்க...
நம்ம கொஞ்சம் இதுலெல்லாம் வீக்குங்க...

bandhu சொன்னது…

பழைய நினைப்புகளை கிளறி விட்டுவிட்டீர்கள்.. Have a nice trip!

கருத்துரையிடுக

பேசுனா....பேர் எழுதுவேன்.....